சென்னை: அக். 24-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 70 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 332 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், உண்ணி காய்ச்சலுக்கு ஒருவரும், எலி காய்ச்சலுக்கு சிறுமியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், தெருக்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாகத் தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.