வாஷிங்டன்: உலகின் ஆக அதிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் உருவெடுத்துள்ளது.
என்விடியா நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி அது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) இச்சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பு 5.03 டிரில்லியன் அமெரிக்க டாலராகப் ($6.4 டிரில்லியன்) பதிவானது.
அதே வேளையில், என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.93 டிரில்லியன் டாலராகக் குறைந்தது. இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுவரும் முதலீட்டு மாற்றங்களும் இன்டெல், அமேசான், ஆல்ஃபாபெட், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் போன்ற பெருநிறுவனங்களின் அண்மைக்கால நிதி நிலை அறிக்கைகளும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இந்த அறிக்கைகள், செயற்கை நுண்ணறிவுக்கான (AI) செலவினங்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளன; ஆனால் ஆப்பிள் நிறுவனம் அத்தகைய அதிகப்படியான செலவினங்களைப் பெருமளவில் தவிர்த்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு கணினி உள்கட்டமைப்பிற்கான பெருஞ்செலவு, உரிய பலனைத் தராது என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், மூலதனச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துள்ள ஆப்பிள் நிறுவனத்தை, 2026ஆம் ஆண்டில் வலிமையான ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய நிறுவனமாக மாற்ற உதவியுள்ளது.
2026ஆம் ஆண்டில் அதன் பங்குகள் 27 விழுக்காடு உயர்ந்துள்ளன. இது செயற்கை நுண்ணறிவுச் செலவினங்களின் முக்கியப் பயனாளியான இரண்டாவது இடத்தில் உள்ள என்விடியாவின் ஆதாயத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்.
உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு இடையில், ஆப்பிள் நிறுவனத்தின் நிலையான நிதி வலிமை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
.png)







English (US) ·