இளையர்களின் சிந்தனைகளைச் செயல்களாக மாற்ற $20 மில்லியன் நிதி

7 hours ago 1

இளையர்கள் சமூகத்தில் ஆக்ககரமான மாற்றங்களை ஏற்படுத்த அவர்களுக்குப் புதிய வழிகள் விரைவில் கிட்டவுள்ளன.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற சிங்கப்பூரின் முதல் இளையர் செயல்பாட்டு சந்தையான ‘இம்பாக்ட், ஐஆர்எல்’ நிகழ்ச்சியில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளையர்களால் முன்னெடுக்கப்படும் ஏறக்குறைய 3,000 சமூகத் திட்டங்களுக்குத் தேசிய இளையர் நிதியிலிருந்து $20 மில்லியன் வரை வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய இளையர் மன்றத்தின் புதிய சிறு மானியத் திட்டம் வாயிலாக அத்தொகை இளையர்களைச் சென்றடையும். ஒரு சமூகத் திட்டத்தைத் தொடங்க அவர்களுக்கு $1,000 வரை மானியம் வழங்கப்படும்.

ஏறக்குறைய $150,000 மதிப்பிலான 150 சிறு மானியங்கள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

கலாசார, சமூக, இளையர்துறை; எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்களாக சிங்கப்பூரின் எதிர்காலத்தில் முக்கியப் பங்குவகிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

“உங்கள் குரலை வெளிப்படுத்துங்கள். உங்கள் சிந்தனைகள்வழி நாட்டை வலுப்படுத்துங்கள்.

“சிந்தனைகளை அர்த்தமுள்ள செயல்களாக மாற்றி தொடர்ந்து மக்களுக்கு உதவுங்கள்,” என்று அவர் இளையர்களை ஊக்குவித்தார்.

சமூகத் தேவைகளுக்குத் தீர்வுகாணும் யோசனைகளையும் திட்டங்களையும் உருவாக்க 350க்கும் மேற்பட்ட இளையர் குழுக்கள் அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தது இளையர்களிடையே உள்ள வலுவான சமூக ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதோடு அந்த ஆர்வத்தை வளர்க்கவும் வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

முதியோரின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்க உதவும் கருவிகளை உருவாக்கும் ‘பிரிண்ட்எயிட்’ திட்டத்தின் துணைத் தலைவர் கொந்தம் இஷ்வர்யா, இத்தகைய மானியங்கள் தங்களது முயற்சிக்கு உதவுவதாகக் கூறினார்.

“பல இளையர்களுக்கு நல்ல யோசனைகள் இருக்கும். ஆனால், நிதி நெருக்கடியால் அவற்றைச் செயல்முறைக்குக் கொண்டுவர முடியாமல் போகிறது. அந்நிலையை மாற்ற இம்மானியம் நிச்சயம் உதவும்,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தேசிய தொண்டூழிய, கொடை மையம் புதிய ‘சிறு நன்கொடை’ முயற்சியையும் அறிமுகப்படுத்தியது. அது இளையர்கள் தாங்கள் விரும்பும் நற்பணிகளுக்குக் $1 முதல் நன்கொடை அளிக்க வழிவகுக்கும்.

எஸ்ஜி இளையர் திட்டத்தின் கலந்தாலோசனைகளின்படி, 70 விழுக்காட்டுக்கும் அதிகமான இளையர்கள் சமூகக் களத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிய வந்துள்ளதென தேசிய இளையர் மன்றம் தெரிவித்தது.

இளையர்கள் சமூகத் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் ஒத்த எண்ணம் கொண்ட பிற இளையர்களைச் சந்திக்கவும் நடைமுறை வழிகாட்டலைப் பெறவும் ‘இம்பாக்ட், ஐஆர்எல்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று மன்றம் தெரிவித்தது.

சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்க முனையும் 15 முதல் 35 வயதிலான சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தனிநபர்களாகவோ குழுக்களாகவோ புதிய சிறு மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Read Entire Article