“அருள் விக்னேஷ் கைது; அனைவரும் தண்டிக்கப்படும்வரை ஓயமாட்டோம்” – மு.க. ஸ்டாலின்

2 hours ago 1

Last Updated:November 27, 2026 6:46 PM IST

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் - அருள் விக்னேஷ்
மு.க. ஸ்டாலின் - அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டிற்கு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.

அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.

116 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரில் நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து காவல்துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து ஐஜி கண்காணிப்பில், எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டவர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருள் விக்னேஷ் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அல்லது தியாகதுருகம் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article