அஞ்சுமன் நூலகம் – ‘‘நூற்றாண்டு அறிவுத் திருவிழா!’’வில்  தமிழர் தலைவர் ஆசிரியர் (காணொலிமூலம்) வாழ்த்துரை

1 hour ago 1

 சமூக நீதி என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான்!

 இப்போது அதற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிற காலகட்டங்களிலே,

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று நாம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்!

மதங்களால் மாறுபட்டு இருக்கலாம், மனங்களால் ஒன்றுபட வேண்டும்!

இதுவே சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளம் – அடிநாதம்!

ஆசிரியர் உரை

புதுவை, அக்.25  சமூக நீதி என்பது அனைவருக்கும் தேவை! அதற்காகத்தான் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற அருமையான சொற்றொடரைக் கொடுத்தார்கள். இப்போது அதற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிற கால கட்டங்களிலே, அனைவருக்கும் அனைத்தும் என்று நாம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.  மதங்களால் மாறுபட்டு இருக்கலாம், மனங்களால் ஒன்றுபட வேண்டும், இதுவே சுயமரியாதை இயக்கத்தினுடைய தொண்டின் அடித்தளமாகும், அடிநாதமாகும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அஞ்சுமன் நூலகம் –

‘‘நூற்றாண்டு அறிவுத் திருவிழா!’’

புதுவை – கோட்டக் குப்பத்தில் அமைந்துள்ள அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் பொது நூலகம் – 100 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அக்டோபர் 23, 24, 25 ஆகிய நாள்களில் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் ‘‘நூற்றாண்டு அறிவுத் திருவிழா’’ நடைபெறுகிறது. நேற்று (24.10.2026) நடைபெற்ற விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துரை காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

அவரது வாழ்த்துரை வருமாறு:

பெருமைக்குரிய ஒன்றாகும்!

கோட்டக் குப்பத்தைச் சார்ந்த நூற்றாண்டு கண்டிருக்கின்ற அஞ்சுமன் நூலகம் சார்பாக நடை பெறக்கூடிய இந்த அறிவுத் திருவிழா – பல இயக்கங்கள், சான்றோர்கள் இவர்களுடைய நூற்றாண்டு விழாவையும் இணைத்து நீங்கள் சிறப்பாகக் கொண்டாடுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நேரில் வர இயலாமைக்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்!

இவ்விழாவில் நேரிலே கலந்துகொண்டு மகிழ வேண்டும் என்று நான் நினைத்தேன், அறிஞர் பெருமக்களுடைய அறிவு கருத்துகளை எல்லாம் கேட்டு, விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதியிருந்த எனக்கு, வெளியூர் பயணம் மேற்கொள்வது ஏற்புடையது அல்ல என்று மருத்துவர்கள்  சொன்ன காரணத்தினாலே, சிகிச்சையில் இருக்கக்கூடிய நான், அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டிய ஒரு நிலை. நேரில் வர இயலாமைக்காக உங்கள் அனைவருடைய மன்னிப்பையும் முதற்கண் நான் கோருகின்றேன்.

1926 ஆம் ஆண்டில்
தொடங்கப்பட்ட நூலகம்!

அருமை நண்பர்களே, நூறு ஆண்டு காணுகின்ற இந்த  அஞ்சுமன் நூலகம் என்பது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற போது, ஒரு பெரிய ஆதரவோடு தொடங்கப்படவில்லை. ஆனால், அதனுடைய வரலாற்றில் எவ்வளவோ சாதனைகளை அடுக்கடுக்காகச் செய்து வந்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் – இந்த நூலகத்தின் நூற்றாண்டும் ஒன்றாகும். இரண்டிற்கும் ஒரு ஒற்றுமையும் கூட இருக்கிறது, அதை விளக்குவோம் பின்னால். அப்படிப்பட்ட இந்த அருமையான விழாவிற்குச் சிறப்பாக வரவேற்பு உரையாற்றிய திருமிகு சுப. சரவணன் அவர்களே, நோக்க உரையாற்றிய என்.கே.ஆர். கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் முகமது ரஃபீக் அவர்களே, நன்றி உரையாற்றவிருக்கும் வரவேற்புக்குழுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களே, நூற்றாண்டு விழாவின் முதன்மை நெறியாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்களே, அன்பு உள்ளங்களே, தாய்மார்களே, பெரி யோர்களே, சான்றோர்களே, ஊடகவியலாளர்களே, அனைவருக்கும் வணக்கம்.

1942 ஆம் ஆண்டிலே அஞ்சுமன்
நூலகக் கூரைக்குத் தீ வைத்தார்கள்!

இந்தச் சிறப்பான ஒரு விழாவிலே, நாம் சிந்திக்க வேண்டியது இந்த நூறாண்டு காலம், ‘அரிமா நோக்கு’ என்று சொல்வதைப் போல – சிங்கம் திரும்பிப் பார்ப்ப தைப் போல, அது கடந்த பாதைகளைப் பார்க்கும்போது, பல பாடங்களையும் படிக்கிறோம், அதனுடைய பயன்களையும் அனுபவிக்கிறோம். பயன் வேறு, பாடம் வேறு. அந்த வகையிலே, ஒரு குறிப்பிட்ட காலத்திலே என்ன நடந்திருக்கிறது என்று சொன்னால், இதைப் பிடிக்காதவர்கள் 1942 ஆம் ஆண்டிலே அஞ்சுமன் நூலகக் கூரைக்குத் தீ வைத்ததால், புத்தக அறைக் கலன்கள் தீக்கிரையாயிற்று.

மக்கள் தொண்டு, மக்கள் பணி, மக்கள் நலன் என்ற ஒரு சிறந்த தொண்டறத்தை எல்லாத் துறைகளிலும் மேற்கொண்டிருக்கிறது!

‘அறிவு விடுதலை வேண்டும்’ என்று சொல்லு வதற்கான ஒரு நிலை வரும்போது, அதைக் கண்டு அஞ்சுபவர்களும், மிரள்பவர்களும் நூலகங்களுக்குத் தீ வைப்பது உலகம் முழுவதும் நடந்திருக்கக்கூடிய ஒரு வரலாற்றுப் பேருண்மை. அந்த வரலாற்றுப் பெருமைகளிலே, இந்த அஞ்சுமன் இடம்பெறுகிறது என்பது உங்களுக்குப் பெருமையே தவிர, ஒருபோதும் அது சிறுமை ஆகாது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு நூலகம், அதனுடைய சாதனைகள். வெறும் நூலகம், நூலகத்தோடு நின்று விடவில்லை, அது வெளியே வந்து, மக்கள் தொண்டு, மக்கள் பணி, மக்கள் நலன் என்ற ஒரு சிறந்த தொண்டறத்தை எல்லாத் துறைகளிலும் மேற்கொண்டிருக்கிறது. இருளிலே இருந்த கோட்டக் குப்பத்தில், மின்சாரம் வரவில்லை. இருள்தான் இருந்தது. 1931 ஆம் ஆண்டில், மாவட்ட வெள்ளைக்கார ஆட்சியிடம் சொல்லி, அப்போது மின்சாரம் இல்லாத இந்த  ஊருக்கு, மின்சாரத்தைக் கொண்டுவந்த பெருமை ஓர் எளிய நூலகமாகத் தோற்றுவிக்கப்பட்ட, ஓர் அற்புதமான இந்த நூலகத்திற்கு இருக்கிறது என்றால், அவர்களுடைய பரவலான உணர்ச்சி, தங்கள் மதம், தங்கள் பிரிவு தங்களுக்கு என்று சின்னதோர் கடுகு உள்ளம் இல்லை அவர்களுக்கு. தொல்லுலக மக்கள் எல்லாம் வாழ வேண்டும், ஊர் நலம் பேண வேண்டும், உலக நலம் பேண வேண்டும் என்ற கருத்தோடு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நம்முடைய புகழ் வணக்கத்திற்கு உரியவர்கள்!

உதாரணம், 1961 ஆம் ஆண்டில்தான் மின்சாரத்தைக் கொண்டுவந்தார்கள் கோட்டக் குப்பத்திற்கு என்றால், அதுவும் ஒரு நூலகத்தைத் தொடங்கி, அதனைத் தொடங்கிய அத்தனை பேரும், அதனைத் தொடர்ந்து நடத்தக்கூடிய அத்தனைப் பேரும், நம்முடைய புகழ் வணக்கத்திற்கு உரியவர்கள், இன்றைக்கு இருப்பவர்களையும் இணைத்துச் சொல்லுகிறோம். பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும், வாழ்த்துதலுக்கும் உரியவர்கள்.

என் சார்பில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்!

நேரிலே வந்து பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. வருவேன், இன்னும் ஒரு சில வாரத்தில் மீண்டும் வருகிறபோது, தனியே கோட்டக் குப்பத்திற்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயமரியாதை இயக்கம் பற்றி எடுத்துரைக்க, என் சார்பாக, எங்களுடைய இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களை அனுப்பியிருக்கிறோம்.  அவர், உங்களுக்கு இந்தக் கருத்துகளை விளக்கமாகச் சொல்லுவார். அந்தத் தலைப்பின் கீழ் அவர்கள் தெளிவாகச் சொல்லுவார்.

 ‘அறிவு விடுதலை இயக்கம்!’

இதற்கிடையிலே ஒன்றே ஒன்று – ஒரு நூலகத்தைத் திறப்பது என்பது இருக்கிறதே, அது பல சிறைச்சாலைகளை மூடுவது என்பதற்கு சமம். ஆகவே, நீங்கள் நூலகத்தை மட்டும் திறக்கவில்லை, சிறைச்சாலைகளை மூடி இருக்கிறீர்கள். சிறைச்சாலைகள் என்று சொல்லும் போது, கட்டடம், கைதிகள் இவற்றை மட்டும் நீங்கள் கருதாதீர்கள். மாறாக, சிறைச்சாலை என்பது, அறிவு விடுதலை பெற வேண்டும் என்பதற்குரியது. இந்த விழாவிற்கு, அறிவுத் திருவிழா என்று நீங்கள் பெயர் வைத்திருக்கிறீர்கள். தந்தை பெரியார் சொன்னார், ‘‘சுயமரியாதை இயக்கம் என்பதற்கு மாற்றுப் பெயர் என்ன வேண்டும். நான் உலகத்தில் இருக்கிற அத்தனை அகராதிகளையும் புரட்டிப் பார்த்தேன், நீங்களும் புரட்டிப் பாருங்கள், எங்காவது சுயமரியாதை என்பதற்கு ஒரு சமமான வார்த்தை, சொல்லாடல் உண்டா?’’ என்று கேட்டார்கள். அது மட்டுமல்ல அதற்கு வேறு பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால், அய்யா, அறிவு ஆசான் தந்தை பெரியார்,  பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் என்று ஆகிக் கொண்டிருக்கிற, அந்த தந்தை பெரியார் அவர்கள்,  அருமையான ஒரு கருத்துச் சொன்னார்கள் – ‘அறிவு விடுதலை இயக்கம்’ என்று.

அனைவருக்கும் அனைத்தும்!

அறிவு, சிறைச்சாலைக்குள் இருக்கிறது. அறிவை, விடுதலை செய்வது எப்படி? நூலகங்கள் மூலமாக, பொதுத்தொண்டு மூலமாக இதுதான் சிறப்பான ஒரு வாய்ப்பாகும். அது மட்டுமல்ல தோழர்களே! இன்னும் சொன்னால், இந்த சுயமரியாதை இயக்கம் என்பது, அது ஒரு குறுகிய வட்டத்திலே, குறிப்பிட்டோரை தாக்குவதற்கோ, மற்றவற்றிற்கோ வரவில்லை. மாறாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதாகும். இப்போது ஓர் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில், ‘பெரும்பான்மை’, ‘சிறுபான்மை’ என்று. ஆனால், எல்லா பான்மையையும் தனித் தனியே பிரித்துப் பார்க்கக் கூடாது, வேற்று மைப்படுத்தக்கூடாது. மனிதகுலம் ஒன்றாக இருக்க வேண்டும், உலகம் ஓர் அணியிலே நிற்க வேண்டும், அனைத்து மக்களும் உறவினர், அனைவரும் உறவினர் என்றார் புரட்சி கவிஞர் அவர்கள். அந்த அனைவரும் உறவினர் என்பதும், ‘அனைத்திற்கும் அனைத்தும்’ என்று சொல்லுவதுதான். சிறுபான்மையினருக்கு இப்படி, பெரும்பான்மையினருக்கு அப்படி என்றெல்லாம் பிரிக்கக்கூடிய காலகட்டத்திலே, பெரியாருடைய தத்துவம், சுயமரியாதைத் தத்துவம் தேவை.

எனவே, இன்னாருக்கு இது! என்று சொல்வதைப் போல, அல்லது ஒரு செயற்கையாக, இயற்கையைத் தள்ளி விட்டுவிட்டு,  மக்களைப் பிரித்து, அவர்களில் உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்பதை போல, பெரும்பான்மை – சிறுபான்மை என்று இருப்பதும் கூட விரும்பத்தக்கதல்ல சுயமரியாதை இயக்கத்தினுடைய கண்ணோட்டத்தில்.

மதங்களால் மாறுபட்டு இருக்கலாம்,
மனங்களால் ஒன்றுபட வேண்டும்!

சமூக நீதி என்பது இருக்கிறதே, அது அனைவருக்கும் தேவை! அதற்காகத்தான் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற அருமையான சொற்றொடரைக் கொடுத்தார்கள். இப்போது அதற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிற காலகட்டங்க ளிலே, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று நாம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.  மதங்களால் மாறுபட்டு இருக்கலாம், மனங்களால் ஒன்றுபட வேண்டும், இதுவே சுயமரியாதை இயக்கத்தினுடைய தொண்டின் அடித்தளமாகும், அடிநாதமாகும். அனைவருக்கும் நன்றி! வாழ்த்துகள்! ஏற்பாடு செய்த தோழர்களுக்குப் பாராட்டுகள்!, எங்கள் இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள நூல்கள் பலவற்றை உங்கள் நூலகத்திற்கு நாங்கள் அனுப்பி இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, மீண்டும் ஒருமுறை நீங்கள் அழைக்காமலேயே நான் வருவேன் என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

–இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் வாழ்த்துரையாற்றினார்.

Read Entire Article