Last Updated:Oct 26, 2026 6:59 AM IST
Weather Update | வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக உருவாகிறது... இதனால் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அல்லிநகரம், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, அரண்மணைப் புதூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திருவண்ணாமலையில் இரவு முழுக்க சாரல் மழை பெய்தது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தபடியும் ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் சென்றனர்.
பழனியில் காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. பழனி - பழைய தாராபுரம் சாலையில் வீட்டின் சுவர்கள் இடிந்து சேதமானது. கொடைக்கானல் மலைப்பாதையில் சொகுசு பேருந்தின் சக்கரங்கள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. வத்தலக்குண்டு பிரதான மலை சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சோழவந்தானில் சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன. இதனிடையே, புதுச்சேரியில் சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக தாழ்வான சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மின் மோட்டார்கள் கொண்டு சாலைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டதை அடுத்து இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!
நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.
இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.
இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!
.png)







English (US) ·