சட்டவிரோதமாக பெண்களிடமிருந்து கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது.
Published:Just NowUpdated:Just Now

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்போது பெண்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, செயற்கை கருத்தரித்தல் (IVF) மற்றும் கருத்தரிப்பு மையங்கள் மூலம் வணிக ரீதியாக கருமுட்டைகளை பிரித்தெடுத்து வந்த பெரும் மோசடி கும்பல் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 43 பெண்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஐவிஎஃப்
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் ஆசைவார்த்தை கூறி ஹைதராபாத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். ஒருமுறை கருமுட்டை தானம் செய்வதற்கு ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை தருவதாகக் கூறி இவர்களை இடைத்தரகர்கள் ஒருங்கிணைத்து, வாடகை வீடுகளில் தங்க வைத்துள்ளனர். மேலும், அந்தப் பெண்களின் உடலமைப்பில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் ஹியூமோக் எச்பி (Humog HP) ஊசிகள் செலுத்தப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.
சோதனையின்போது, சிரிஞ்சுகள், ப்ரிமோலட் மற்றும் மேப்ரேட் மாத்திரைகள், ஆவணங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறை, முறையான மருத்துவக் கண்காணிப்பு இன்றியும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான எந்தவித விதிகளையும் பின்பற்றாமலும் இவர்கள் ஆபத்தான முறையில் இச்செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததையும் கண்டுபிடித்திருக்கிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமித் சர்மா (44) மற்றும் பெண்களுக்கு வலைவீசிய நிக்கத் பர்வீன் (31) உட்பட ரமேஷ் கதூன், மேகவத் ஸ்ரீனிவாஸ், ஜேப்ரே பிரதீப் (ART வங்கி மேலாளர்), எஸ்கே பர்வீன், விஜய் பகவா ராவ் மற்றும் பங்கஜ் சோனி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது
அமித் சர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதத்திற்கு ரூ. 50,000 வாடகையில் பிரகாஷ் நகரில் வீடு எடுத்து இக்கடத்தல் கும்பலை இயக்கி வந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதார் அட்டைகள், ஒப்புதல் படிவங்கள் மற்றும் மருத்துவப் பதிவேடுகளைப் போலி ஆவணங்களாகத் தயாரித்து இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் தொடர்புடைய பிற செயற்கை கருத்தரித்தல் (IVF) மையங்கள் மற்றும் உதவிபெறும் மறுஉற்பத்தி தொழில்நுட்ப (ART) வங்கிகள் குறித்தும், கடத்தல் மற்றும் ஏமாற்று வேலைகளில் மேலும் யார் யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பேகம்பேட் மற்றும் சரூரானகர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 மற்றும் உதவிபெறும் மறுஉற்பத்தி தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021-ன் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மல்காஜ்கிரி காவல் ஆணையர் பி.சுமதி, ஐ.பி.எஸ் மேற்பார்வையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இத்தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.png)







English (US) ·