Last Updated:Oct 25, 2026 4:09 PM IST
சென்னையில் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இதில் 2000 பெண்களுக்கு காமாட்சி அம்மன் விளக்கு வழங்கப்பட்டது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின்பு முதன்முறையாக மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையில் பேசியது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் நிர்வாகிகள் சிலர் தகவல் சொல்லியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், 2000 பெண்களுக்கும் தலா ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்திருக்கிறார். மேலும், மேடையில் பேசிய அவர், பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியதாகவும், அனைவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று சொல்லப்படுகின்ற சூழ்நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அண்மையில் தனுஷ் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவரது அரசியல் கட்சி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
.png)






English (US) ·