Last Updated:Aug 03, 2026 11:02 AM IST
இந்த அகாடமியை நடத்த ஆண்டுதோறும் சுமார் ₹18 லட்சம் செலவாகும் நிலையில், அனைத்து செலவுகளையும் தனது சொந்த வருமானத்தில் இருந்து மேற்கொள்வதாகவும், எந்த நன்கொடையும் பெறுவதில்லை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

News18
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் சூழலில், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் கிங்ஸ் அகாடமி கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட கட்டணம் அல்லது நன்கொடை பெறாமல் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் TNPSC, TNUSRB, வங்கி, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் ₹18 லட்சம் சொந்த செலவில் இந்த கல்விச் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அகாடமியின் நிறுவனர் பேச்சுமுத்து தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு சமூக சேவை நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அகாடமி, ஆரம்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாலை நேர இலவச டியூஷன் மையமாக செயல்பட்டது. பின்னர் TNUSRB, TNPSC Group-IV, Group-II, வங்கி, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. முதல் ஆண்டிலேயே 60 பேரில் 38 பேர் தேர்ச்சி பெற்றது அகாடமிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாக அவர் கூறினார்.
"எங்களிடம் படிப்பதற்கு முன்போ, படிக்கும் போதோ, வேலை கிடைத்த பிறகோ எந்த மாணவரிடமும் ஒரு ரூபாய் கூட கட்டணமாகவோ, நன்கொடையாகவோ வாங்கவில்லை. இனியும் வாங்கப் போவதில்லை. 'இலவசம் என்றால் தரம் இருக்காது' என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்கான சான்றாக, 2024-ஆம் ஆண்டு வல்லரசு என்ற மாணவர் வங்கித் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். 2022-ஆம் ஆண்டு TNUSRB தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அனீஸின் பெயரிலும் ஹால் அமைத்துள்ளோம்," என்று பேச்சுமுத்து தெரிவித்தார்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே திட்டமிட்டு தயாராக வேண்டும் என்றும், குறிப்பாக வங்கி மற்றும் SSC தேர்வுகளுக்கு ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாசிக்கும் பழக்கம், கணிதம் மற்றும் ரீசனிங் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், ChatGPT, Gemini, DeepSeek போன்ற AI கருவிகளை மாணவர்கள் கற்றுக்கொண்டு சரியாக பயன்படுத்தினால் எதிர்கால போட்டித் தேர்வுகளில் அது பெரும் உதவியாக இருக்கும் என்றும், சமூக வலைத்தளங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அகாடமியில் மாணவர்களுக்காக இலவச தங்குமிடம், படிப்பதற்கான வசதிகள் மற்றும் சமையலறை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைநிறுத்தப்பட்டிருந்த இலவச உணவு வழங்கும் திட்டத்தையும் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அகாடமியை நடத்த ஆண்டுதோறும் சுமார் ₹18 லட்சம் செலவாகும் நிலையில், அனைத்து செலவுகளையும் தனது சொந்த வருமானத்தில் இருந்து மேற்கொள்வதாகவும், எந்த நன்கொடையும் பெறுவதில்லை என்றும் அவர் கூறினார்.
அகாடமியில் பயின்று அரசு பணியில் சேர்ந்த சரவணன், "ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலாலும், திட்டமிட்ட பயிற்சியாலும் வெறும் ஆறு மாதங்களிலேயே அரசு பணிக்குத் தேர்ச்சி பெற முடிந்தது. இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த உதவின," என்றார். மாணவி சோபியா கூறுகையில், "எனது இரண்டு அக்காக்களும் இந்த அகாடமியில் பயின்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் வெற்றியை பார்த்து நானும், தற்போது எனது தம்பியும் இங்கு பயிற்சி பெற்று வருகிறோம். இந்த அகாடமியின் பயிற்சியும், வழிகாட்டுதலும் அரசு வேலை என்ற இலக்கை அடைய எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது," என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
Aug 03, 2026 11:02 AM IST
.png)



English (US) ·