ஸநாதனம் இதுதான்! (4) குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் நியாயம்?

13 hours ago 2

“பிறப்பால் வர்ணமும், சாதியும் நிச்சயிக்கப்படுவதாக எப்படி யெல்லாம் சனாதனிகள் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று பாருங்களேன்.”

பிறப்பால்தான் வர்ணமும், சாதியும் உருவாகிறது என்பதற்கு சனாதனம் கூறும் மற்றொரு விளக்கத்தினை ‘ஆர்ய தர்மம்’ – பங்குனி – 1929 இதழில் வெளிவந்த ‘பிறப்பிலேயே சுத்தி அசுத்திகளுக்கு ஏற்றபடி உயர்வு தாழ்வு’ கட்டுரையில் வாசித்தேன். அந்த முழுக் கட்டுரையையும் கீழே தருகிறேன். இக்கட்டுரையை ஆர்ய தர்மம் இதழ் ஆசிரியரே எழுதியிருக்கிறார்.

பிறப்பிலேயே சுத்தி அசுத்திகளுக்கு
ஏற்றபடி உயர்வு தாழ்வு!

“பிராணிகளிடத்திலும் உயர்வு, தாழ்வு பாவிக்கப்பட்டு வருவது வழக்கமா யிருக்கின்றது. இது தப்பு என்று தற்காலத்திய சிலரது கூற்று. பணக்காரன், படித்தவன் முதலியவர்களை உயர்த்திப் புகழ்வதும், பிச்சைக்காரன், படிக்காதவன் முதலியவர்களைத் தாழ்த்தி இகழ்வதும் எதனாலென்று அவர்களைக் கேட்போம். பணமும், படிப்பும் புகழ்வதற்கும், அஃதில்லாமை இகழ்வதற்கும் காரணமென்று குறித்த வார்த்தையினாலேயே தெரிகின்றதே யென்றால் – அப்பொழுது உயர்வு தாழ்வு பாவிக்கப்படுவது தப்பு என்று கூறுவது தப்பாகும்.

உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரண மிருப்பின் அவை பாவிக்கப்படுவது உசிதமேயாகும். பணம், படிப்பு முதலிய வற்றால் அவை பாவிக்கப்படுவது சரியே. ஆனால், பிறப்பினாலேயே அவை பாவிக்கப்படுவது தப்பு என்றால் அது பொருந்தாது. பிறப்பினாலேயே உயர்வும், தாழ்வும் காணப்படுகின்றது. கர்ப்ப ஸ்ரீமானாயுள்ளவன் பிறப்பினாலேயே என் கண்ணே! கண்மணியே! என் அருந்தவப்பயனே! என புகழப்படுகிறான்.

நித்திய தரித்திரனுக்குக் குழந்தை பிறந்தால் தாய், தந்தையர்களே அதைப்பற்றி – இந்தப் பிள்ளை பிறக்கவில்லை யென்று யார் தவங்கிடந்தாள் என இகழ்ந்து பேசுகிறார்களென்றால் மற்றவர் பேசக் கேழ்க்க வேண்டுமா? பிழைக்கப் பணமில்லையே என்பதனால் தரித்திரன் அப்படிச் சொல்லுகிறானேயன்றி அந்தக் குழந்தையின் மீது அபிமானமில்லாமலும், நிந்திக்க வேணுமென்றும் சொல்லுவதில்லை யென்றால் -அபிமானமிருக்கட்டும். ஏதோ ஒரு காரணமிகழ்வதற்கு இருக்கக் கொண்டுதான் அப்படி நேருகிறது.

அபிமானிக்கப்படுபவன் தாழ்த்தத்தகாத வனென்றும் தாழ்த்தத்தக்கவன் அபிமானிக்கத் தகாதவனென்றும் கருத முடியாது. ஆகவே பிறக்கும்பொழுதே புகழப்படுவதற்கும் இகழப்படுவதற்கும் பணமும் படிப்பும் மற்ற குணகர்மாதிகளும் காரணமில்லை. அவையெல்லாம் பிறந்தபின் வெகுகாலம்கழித்து நேரக் கூடியவைகள். ஆகவே அதற்குக் காரணம் பிறப்புக்கு முன்னமேயே ஏற்பட்டிருக்க வேண்டும்.

தாய், தந்தைகளுக்கும் பிறக்கும் சிசுவிற்கும் அஸாதாரண காரணமான சுக்கில சோணி தாதிகளுக்கும் ஸாதாரண காரணமாகிய தேசகாலாதிகளுக்கும் உள்ள சுத்தி அசுத்தியாகும். சுருக்கிச் சொன்னால் ஜாதி என்பதாகும். ஆகையால் ஜாதியாலேயே (பிறப்பினாலேயே ) உயர்வு, தாழ்வு கூறப்படுவது உசிதமேயாகுமென்று பெரியோர்களது கருத்து. தாய்,தந்தை முதலியவர்களின் சுத்தியென்பது அவர்களது திரிகரண (மூன்று கரணங்களின்) சுத்தியாகும்.

உலகத்திலும் சொன்னதை உண்மை யென்று ரூபிப்பதற்காக “திரிகரண சுத்தியாய்ச் சொல்லுகிறேன்” என்று சொல்வது உண்டு. அந்த திரிகரணங்கள் மனது, வாக்கு முதலிய இந்திரியங்கள், சரீரம் எனப்படுவனவாகும். அவற்றுள் மனச்சுத்தி யோகாப்பியாஸத்தாலும், வாக்கின் சுத்தி ஸம்ஸ்கிருத சப்தத்தைச் சொல்லுவதாலும் மற்ற இந்திரியங்களின் சுத்தி சுபமான அததன் விஷயங்களை ஸேவிப்பதாலும் சரீர சுத்தி ஆஹர்ராதி சுத்தியாலும் ஸம்பாதிக்க வேண்டியதாகும்.

துர்வாஸனையெனப்படும் கெட்ட விருக்திகளால் மனது அசுத்தியடைகின்றது. ஸம்ஸ்கிருத சப்தமல்லாமல் வேறு தேச பாஷாதி சொற்களால் வாக்கு அசுத்தி யடைகின்றது. மற்ற இந்திரியங்கள் அசுபங்களான விஷயங்களின் ஸேவை யால் அசுத்தியடைகின்றன. சரீரம் ராஜஸ தாமஸங்களான கெட்ட ஆகாரங்களால் அசுத்தியடைகின்றன. அததன் அசுத்திகளை அததன் நிவர்த்திக்குக் காரணங்களாகக் குறிக்கப்பட்ட ஸாதனங்களால் விலக்கி சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஸந்தானமேயுண்டாகும். அன்றியும் ஒவ்வொரு வஸ்துகளும் தனது உபாதான காரணத்திற்கு ஸமானமான ஜாதியுடையதாகவே உண்டாகும். அதாவது மண்ணால் செய்யப்பட்ட குடம் மண்குடமாகவும் பொன்னாலாய குடம் பொன் குடமாகவுமாவது பிரஸித்தமல்லவா? அல்லாமலும் காரண வஸ்துவின் பரிசுத்திக்கேற்றவாறு கார்யவஸ்துவிலும் பரிசுத்தியேற்படும் என்பது மாத்தேரின ஸுவர்ணத்தால் செய்யப்பட்ட நகையிலும் மாத்துக்கட்டையான ஸுவர்ணத்தாலாக்கிய நகையிலும் வித்தியாஸத்தைக் கண்டவர் களுக்கு பிரத்தியக்ஷமன்றோ.

ஆனால் இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். அதாவது ஸுவர்ணம் மரத்துக்கட்டையாய் போய் விட்டதற்காக அதனால் உண்டாக்கிய நகை ஸுவர்ண நகையாகாமல் வெள்ளி நகையாகவோ பித்தளை நகையாகவோ ஆய்விடாது. ஆகவே ஒரு வகுப்பினரான தாய், தந்தைகளுக்கு ஜனிக்கும் சிசுவும் அதே ஜாதியுடையதாயிருக்கும். அவர்களின் குண தோஷத்திற்காக வேறு ஜாதியாய் விடாது. அந்த திரிகரணங்களின் சுத்தியை யோக ஸேவையால் கண்டறிந்த மஹான்கள் அது இன்ன ஜாதியாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து வர்ணாச்ரம வியவிஸ்தையையும் அதில் உயர்வு தாழ்வையும் சுருதியில் கூறியவாறு தங்களது ஸ்மிருதியிலும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

அந்த வியவஸ்தையை மீறிக் கண்டவர் களையெல்லாம் “என் ஸஹோதரர்களே யென்று அழைப்பவர்கள் தன் ஸொத்தில் ஒரு காலணாவாவது அவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்களா? கண்டவர் களையெல்லாம் ஸஹோதரராக பாவிப் பவர்கள் ஒரே தாயிடம் பிறந்த தன் ஸஹோதரனோடு பாக வியாஜ்யம் செய்யாமல் விடுகின்றார்களா? பெற்ற தகப்பனைப் பறக்க விட்டவர்களுக்கா கண்டவர் ஸஹோதரராவர்? ஆகவே சுத்த ஜாதியாரான தாய், தந்தைகளுக்குப் பிறந்தவர் சுத்த ஜாதியான உயர்ந்தவர்தான், மற்றவர் மற்றவர்தான்.

எவ்வளவோ ஜன்ம பரம்பரையாக சுத்த ஸாத்துவிக ஆகாரத்தையே புஜித்து ஸம்ஸ்கிருத சப்தத்தாலேயே தங்களது பார லௌகிக காரியங்களைச் செய்துகொண்டு, மற்ற இந்திரியங்களாலும் சுப விஷயங்களையே அனுபவித்து மனதில் சுபவாஸனையையே விருத்தி செய்து கொண்டிருப்பவர்களும் இப்படி யெல்லாமில்லாத மற்றவர்களும் ஒரே மாதிரியாவார்களா? ஆகையால் பெரியோர் வழங்கிவந்த வர்ணாசிரம விபாகங்களை அனுஸரித்து யாவரும் சிரேயஸ்ஸையடைவார்களாக.”

பிறப்பால் வர்ணமும், ஜாதியும் நிச்சயிக்கப்படுவதாக எப்படியெல்லாம் ஸநாதனிகள் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை மேலுள்ள கட்டுரை மூலம் தெளிவாக உணர முடியும். இது போதாது என சிலர் பிறப்பால் அல்ல, வர்ணமும் ஜாதியும் செய்யும் தொழில் மற்றும் குணத்தால் நிச்சயிக்கப்படுவது என டெங்கு கொசுவை விட மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன என்பதை மேலுள்ள கட்டுரையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஸநாதனிகளின் ஆதிக்க எண்ணத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஜாதியும், வர்ணமும் வேறு வேறு என்கின்றவர்களும் மேலுள்ள கட்டுரையினை வாசித்தால் தெளிவு பிறக்க வாய்ப்பு உண்டு.

ஸநாதனத்தின் வன்மத்தினை விளக்குவதற்கு இவர்களையெல்லாம் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல், ஸநாதனத்திலிருந்து விடுதலை அடைவதற்கு ஸநாதன நூல்களே நமக்கு வழிகாட்டி!

ஆதார நூல்: ‘ஆர்ய தர்மம்’ – பங்குனி – 1929 இதழில் வெளிவந்த ‘பிறப்பிலேயே சுத்தி அசுத்திகளுக்கு ஏற்றபடி உயர்வு தாழ்வு’ எனும் கட்டுரை.

– தினகர ஞானகுருசாமி

Read Entire Article