இணைய ‘ஆப் ஸ்டோர்’கள்மீது சிங்கப்பூரில் முதன்முறையாக நடத்தப்பட்ட தணிக்கை நடவடிக்கையில் சர்ச்சைக்குரிய 65 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆடைகளை நீக்கிக் காட்டும் செயலிகள், பணம் வழங்கும் கொலை, சூதாட்டக் கருப்பொருள் கொண்ட விளையாட்டுகள் ஆகியவை அடங்கும்.
ஆடை அகற்றும் அந்தச் செயலிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படங்களிலிருந்து ஆடைகளை மின்னிலக்க முறையில் நீக்கி, அவர்களின் அனுமதியின்றி ஆபாசப் படங்களை உருவாக்குகின்றன.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அத்தணிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில், ‘ஆப் ஸ்டோர்’களின் சொந்தத் தகுதிவிதிகளின்படி, 24 செயலிகளுக்கு ‘18+’ என்ற வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்த 24 செயலிகளில் பாலியல் தூண்டுதல் தரும் காட்சிகள், குற்றச்செயல்கள், போதைப்பொருள் பயன்பாடு, பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆணையம் அந்த ‘ஆப் ஸ்டோர்’களுக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த 65 செயலிகள் நீக்கப்பட்டன. அத்துடன் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்த 24 செயலிகளுக்கான வயது வரம்பும் திருத்தப்பட்டன.
ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோர், ஹுவாவெய் ஆப் கேலரி, சாம்சங் கேலக்ஸி ஸ்டோர், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் ஆகியவை அவை.
“பயனீட்டாளர்கள் தங்களின் சேவைகளில் உள்ள தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களைப் பார்ப்பதையோ அணுகுவதையோ குறைக்க வேண்டும் என்பதையும் வயது வரம்புகள் துல்லியமாகவும் சீராகவும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, குறிப்பிட்ட அந்தச் செயலி விநியோகச் சேவைகளை நாங்கள் தொடர்ந்து பொறுப்பேற்கச் செய்வோம்,“ என்று ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 24) தெரிவித்தது.
‘குறிப்பிட்ட செயலி விநியோகச் சேவை’களுக்கான முதல் இணையப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை 2026’ல், அந்தக் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.
.png)





English (US) ·