ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகளைக் குவித்த தலைமைக் காவலர்

56 minutes ago 1

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர், முறைகேடாக ரூ.65 கோடிக்குமேல் அசையாச் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பது அம்பலமாகியுள்ளது.

பெரோஸ் கான் என்ற அந்த ஆடவர், வருமானத்துக்கு அதிகமாகப் பேரளவில் சொத்துகளைச் சேர்த்துள்ளதாகத் தொடர்ந்து பல புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பெரோஸ் கான் வீட்டிலும் அவரது உறவினர்களின் இடங்களிலும் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 24 ஆண்டுகளாகக் காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார் பெரோஸ் கான்.

அவரது சட்டபூர்வ வருமானம் அதிகபட்சமாக, ரூ.75 லட்சம் முதல் ரூ.1.94 கோடி மட்டுமே இருக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சோதனையின்போது பெரோஸ் கான், அவரது குடும்பத்தார், நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மிகப்பெரிய வணிக வளாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.65 கோடியைத் தாண்டுகிறது.

நீண்ட நாள்களாகப் பணிக்குச் செல்லாமல் முறைகேடாக விடுப்பில் இருந்து கொண்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி நில உரிமையாளர்களை மிரட்டியதாக பெரோல் கான்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் பலரை மிரட்டி, குறைந்த விலையில் பல இடங்களை வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழலில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Read Entire Article