ஹுவாவெய் நிறுவனம் குற்றவாளி என அமெரிக்காவில் தீர்ப்பு

25 minutes ago 1

நியூயார்க்: ஈரான் வர்த்தகம் தொடர்பில் வங்கிகளை ஏமாற்றியதாகவும் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கில் சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்தனர்.

அமெரிக்கா 2018ஆம் ஆண்டில் தொடங்கிய இவ்வழக்கைத் தொடர்ந்து, ஹுவாவெய் நிறுவனம் வர்த்தகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும், அந்நிறுவனம் அமெரிக்கத் தொழில்நுட்பத்தை அணுக முடியாதபடி கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன.

எனினும், சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பங்கு வகிப்பதால் ஹுவாவெய் நிறுவனத்தின் வணிகம் பாதிக்கப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்குமேல் நடந்த விசாரணையில் அரசுத் தரப்பு 60க்கும் மேற்பட்ட சாட்சிகளையும் எதிர்த்தரப்பின் 15 சாட்சிகளையும் அழைத்தது.

ஹுவாவெய் மற்றும் அந்நிறுவனத்தின் மூன்று துணை நிறுவனங்கள்மீது வங்கி மோசடி, தடை உத்தரவு மீறல், வர்த்தக ரகசியத் திருட்டு, நீதிக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹுவாவெய் நிறுவனரின் மகளும் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்சோ கனடாவில் கைது செய்யப்பட்டபோது இவ்வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

அது அமெரிக்கா, சீனா, கனடா இடையே அரசதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியது.

அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானுடன் டாலர் பரிவர்த்தனை செய்ய எச்எஸ்பிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், பிஎன்பி பாரிபாஸ் வங்கிகளை ஹுவாவெய் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2020ஆம் ஆண்டில் சிஸ்கோ, குயின்டெல், சிநெக்ஸ் நிறுவனங்களின் தொழில்நுட்பங்களைத் திருடச் சதி செய்ததாகப் புதிய குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன.

ஈரானில் சட்டவிரோத வணிகம் செய்ததை ஒப்புக்கொண்ட மெங்கின் அறிக்கையை அரசுத் தரப்பு சமர்ப்பித்தது. மெங் சாட்சியமளிக்கவில்லை; ஆனால் எச்எஸ்பிசி வங்கியாளர் சாட்சியமளித்தார்.

200,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஏறக்குறைய 170 நாடுகளில் இயங்கும் ஹுவாவெய்யின் ஈரான் செயல்பாடுகளை 2012, 2013ஆம் ஆண்டுகளில் ராய்ட்டர்ஸ் செய்திகள் அம்பலப்படுத்தியதும் விசாரணையில் விவாதிக்கப்பட்டது.

Read Entire Article