மூத்த குடிமக்கள் இணையவழி மோசடிகளுக்கு ஆளாகாமல் தடுக்க காவல்துறை விழிப்புணர்வு!

8 minutes ago 1

சென்னை, நவ. 23- சென்னையில் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் இணையவழி மோசடிகளைத் தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில் 3 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சைபர் மோசடிகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்கும்படி, அனைத்து காவல் நிலைய காவல் துறையினருக்கும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய் சுபோதயா அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உஷாராணி தலைமையிலும், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள அய்சிஅய்சிஅய் வங்கி வளாகத்தில் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலும், ஈ.வெ.ரா. சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலும் 21.11.2026 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

3000 ஏக்கர் சம்பாப் பயிர்கள்
தண்ணீர் இன்றி கருகும் அவலம்!

மன்னார்குடி வயலில் இறங்கி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்!

திருவாரூர், நவ. 23- மன்னார்குடி அருகே பாமணி ஆற்றில் தண்ணீர் வராததால் கருகி வரும் சம்பா பயிர்களை கண்டு வேதனையடைந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வயலில் இறங்கி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எளவனூர் பகுதியில் பாமணி ஆற்றுப் பாசனத்தை நம்பி 5,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தண்ணீரின்றி 3,000 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கருகிவரும் பயிர்களைக் கண்டு வேதனை அடைந்த விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், நேற்று எளவனூரில் உள்ள தங்களது வயல்களில் இறங்கி ஒப்பாரி பாடல்களைப்பாடி கும்மியடித்து தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கலைவாணி கூறியது: செப்.1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போதே 45 நாட்களுக்குத்தான் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடியை தொடங்கினோம். ஆனால், மேட்டூரில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை முழுமையாக வரவில்லை.

இதனால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில்

சென்னை மாவட்டத்தில்
8,500 பேர் விண்ணப்பம்!

சென்னை, நவ. 23- இரு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் 8,502 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடுத்த ஆண்டு ஜன.1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் மாளிகையில் நேற்று (22.11.2026) வெளியிட்டார்.

இதன்படி சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேர், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேர், இதர வாக்காளர்கள் 900 பேர் என மொத்தம் 29,14,908 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 4,079இல் இருந்து 4,070 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏப்.1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 28,93,505 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 21,403 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நவ.12 முதல் டிச.11ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்ணப்பிக்கலாம். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இரு நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5,156 விண்ணப்பங்களும், வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க தியாகராய நகர் தொகுதியில் ஒரு விண்ணப்பமும், பெயர் நீக்கம் கோரி 132 விண்ணப்பங்களும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த 3,213 விண்ணப்பங்களும் என மொத்தம் 8,502 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று (22.11.2026) ஒரே நாளில் 6,804 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவ.29ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Read Entire Article