மாற்றுத்திறனாளிகள், நரம்பியல் பன்முகத்தன்மை கொண்டவர்கள், மனநலச் சவால்களை எதிர்கொள்பவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகக் கேட்டறியும் 'மனித நூலகம்' நிகழ்ச்சி வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது.
சமூகம் அவர்கள்மீது கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டங்களை மாற்றுவதையும், அவர்களைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துவதையும் இந்நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிரம்போலின் அட் ஸ்கேப் (Trampoline@*SCAPE) 5வது தளத்தில் நவம்பர் 4, 11 18 ஆகிய தேதிகளில் ‘அன்ஹெர்ட் எக்கோஸ்’ (Unheard Echoes) எனும் அடித்தளத் தொண்டு நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
‘ஹாஷ்.பீஸ்' (Hash.peace) வழங்கும் 'சாம்பியன்ஸ் ஃபார் பீஸ்' (Champions for Peace) என்ற திட்டத்தின் நிதியுதவியுடன் இந்த ‘அன்ஹர்ட் எக்கோஸ்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘மனித’ நூலகத்தில், புத்தகங்களுக்குப் பதிலாக உண்மையான மனிதர்கள் தங்கள் வாழ்வியல் கதைகளையும் அனுபவங்களையும் நேரில் பகிர்ந்துகொள்வர்.
ஒவ்வோர் அமர்விலும் மனிதப் புத்தகங்களாக மூவர் கலந்துகொள்வர். இதில் மாற்றுத்திறனாளிகள் நரம்பியல் பன்முகத்தன்மை கொண்டவர்கள், மனநலக் குறைகளை வென்றவர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த அமைப்பின் குழுத் தலைவராகவும் விளம்பரப் பிரிவுத் தலைவராகவும் உள்ள 29 வயது பானி ஐயாட், நாடகக் கலைஞரும் படைப்பாளியாகவும் செயல்பட்டு வருகிறார்.
‘ஆட்டிசம் குறைபாட்டுடன் வாழும் சிங்கப்பூரரின் நாட்குறிப்பு’ (The Diary of the Autistic Adult Singaporean) என்ற தொடர்மூலம் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் முயற்சிகளில் இந்நிகழ்ச்சி அங்கம் வகிக்கிறது.
“ஊடகங்களில் பெரும்பாலும் அவர்கள் அனுதாபத்திற்குரியவர்களாகவோ சவால்களை மட்டுமே எதிர்கொள்பவர்களாகவோ சித்திரிக்கப்படுகின்றனர். அதனை மாற்றி, அவர்கள் தனித்துவமான திறன்களும் தன்னாளுமையும் கொண்டவர்கள் என்பதை உணர்த்தவே இந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன,” என்று திரு பானி ஐயாட் கூறினார்.
.png)






English (US) ·