புதுடெல்லி: நவீன உலகில் போர்கள் வெறும் போர்க்களங்களோடு முடிந்து விடுவதில்லை நாட்டின் பொருளியலை முடக்கும் வகையில் மின்னிலக்கத் தளங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற என்றும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
எனவே, இந்தியாவின் வங்கி அமைப்புகளைப் பாதுகாக்கவும் இணையத் தாக்குதல்களில் இருந்து மின்னிலக்கக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவில் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் ரூ.169 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தரவு மையம், இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கிவைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலக அளவில் இன்றைய சூழலில் நவீன போர்முறைகள் உருமாறி வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, ராணுவ வலிமை மட்டுமன்றி, ஒரு நாட்டின் நிதி அமைப்பையும் பொருளியலையும் முடக்குவதன் மூலமாகவே அதைப் பலவீனப்படுத்த இணையப் பயங்கரவாதிகள் முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
இந்தியா உலக அளவில் பொருளியல் ரீதியாக வேகமான வளர்ச்சியைப் பெற்றுவரும் நிலையில், நாட்டின் வங்கி அமைப்புகளையும் மின்னிலக்கத் கட்டமைப்பையும் இணையக் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றார் அவர்.
பழைய பயிற்சி முறைகளையோ அல்லது வழக்கொழிந்த தொழில்நுட்பக் கருவிகளையோ கொண்டு இத்தகைய நவீன இணைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க முடியாது என்று தெரிவித்த திரு மோடி, வலுவான உள்கட்டமைப்பும் திறமையான மனிதவளமும் தேவை என்றார்.
அதற்குப் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள இணையப் பாதுகாப்பு மையம் பெரும் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வங்கியியல் துறை உலகிலேயே மிகவும் திறமையானதாகவும் 24 மணி நேரமும் மக்களுக்குச் சேவை வழங்கும் தளமாகவும் உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 60 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் நிதிச் சேவைகள் சென்றடைந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
அடுத்த பத்தாண்டுகளில், இந்தத் துறையை மேலும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதே முதன்மை இலக்கு என்றார் அவர்.
.png)







English (US) ·