பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்பக் கண்காட்சி!

1 hour ago 1

வல்லம், அக். 31- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்   (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி 29.10.2026 முதல் 30.10.2026 வரை  பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.பேபி கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக நிகர்நிலை இணைதுணை வேந்தர் ஆர்.மல்லிகா, மற்றும் பதிவாளர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 25 மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 600க்கும் மேற்பட்டோர் கண்காட்சிக்குப் பதிவு செய்திருந்தனர்.

இக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அறிவியல் காட்சிகளான கோளரங்கம், முப்பரிமாண அரங்கத்தோற்றம், AR & VR zhone, விசுவல் அன்ட் கேமிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் சார்ந்தவைகள் இடம்பெற்றன.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தன்னம்பிக்கையை வளர்க்க…

இக் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளை இணை துணைவேந்தர் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். “பெரியாரின் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாணவர் நலப்பிரிவுத் தலைவர் சரோன் அஸ்லி வரவேற்புரை வழங்கினார். ஆலோசகர் அப்ரான் நபீலா தொகுப்புரை வழங்கினார். இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா தலைமையுரையாற்றும் போது “1975ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்குச் சிந்தனையோடு  ‘இனிவரும் உலகம்’ என்ற நூலில் வருங்காலங்களில் அனைவருடடைய கையிலும் ஒரு கைப்பேசி இருக்கும் என்பதை அன்றே கூறியுள்ளார். அந்தப் பயன்பாடு இன்று நம்மிடம் உள்ளது. மேலும் சமுதாய  மாற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படும் வகையில் வளர்ச்சிகள் இருக்க வேண்டும், மாணவர்களின் ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்கு  பயன்படக்கூடிய வகையில் எப்போதும் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

செயற்கை நுண்ணறிவு

சிறப்பு விருந்தினர்களைப் பற்றி இணையச் செயலாளர் திவ்யா தாட்சன்யா மற்றும் லிங்கேஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில், “1999 வீ.அன்பரசன் பதினொன்றாம் வகுப்பு பயிலும் போதே புதிய கண்டுப்பிடிப்புகளை கண்டுப்பிடிப்பதில் திறமையுள்ளவராக இருந்தார். விமானம் பற்றி ஒரு கட்டுரையை மாஸ்கோவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டிற்கு சமர்பித்தார். அக்கட்டுரையை மாஸ்கோ பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டதால் அங்கே சென்று பன்னாட்டு அளவில் நடந்த மாநாட்டில் உரையாற்றினார்.

2001ஆம் ஆண்டு நானோ டெக்கானஜி பயின்றார் மற்றும் உளவியல் செயற்கை நுண்ணறிவு பற்றி தனது கண்டுபிடிப்புகளை ஆராய்ந்தார். பாலிடெக்னிக் பயிலும்போதே அவர் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் இஸ்ரோவின் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஏவுகனை வடிவமைப்பினை பற்றியும், அதன் செயல்பாட்டினைப் பற்றியும், மேனாள் குடியரசுத் தலைவர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களிடம் கற்றுக்கொண்டார். இவ் அறிவியல் கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு புதுச்சேரி அருணா மருத்துவப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.அழகரசன் ரூ.1 லட்சத்திற்கான பரிசுகளை வி.அன்பரசன் நினைவாக வழங்கினார். “அவர் மறைந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக என சகோதரனின் நினைவாக ஆண்டுதோறும் இக்கண்காட்சிக்கான பரிசியினை வழங்குவதில் மகிழ் வடைகிறோம்” என்றார்.

மாணவர் பிரிவு செயலர் ஜெயசீலன் பரிசு பெற்ற மாணவர்களை அறிவித்தார். நான்கு பிரிவுகளில் நடைபெற்ற கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவர் பிரிவின் ஆலோசகர் இர்பான் சகில் நன்றியுரையினை வழங்கினார். 150 பள்ளிகளை சார்ந்த 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கண்காட்சியைக் கண்டுகளித்து பயன்பெற்றனர். இந்தக் கண்காட்சி மாணவர்களின் எண்ணங்களை மேம்படுத்தும் வகையில் அமைந்ததாக  மாணவர்கள் கூறினர்.

Read Entire Article