சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) இரவு முழுவதும் நிலவிய சூழலைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (அக்டோபர் 26) காலை நிலவரப்படி நாடெங்கிலும் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
காற்றில் ஒரு மணி நேர பிஎம்2.5 அளவீடு இயல்பான வரம்பிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நன்று முதல் மிதமானது வரையிலான அளவிலும் நீடித்தன.
திங்கட்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களிலும் பதிவான ஒரு மணி நேர பிஎம்2.5 அளவீடு 20 முதல் 33 வரை பதிவாகியது.
அதே வேளையில், 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவு 69 முதல் 76 வரை பதிவானது. பிஎம்2.5 அளவீடு மணிதோறும் கணக்கிடப்பட்டு தற்போதைய காற்றுத் தரத்தை உடனுக்குடன் பிரதிபலிக்கிறது.
பூஜ்ஜியம் முதல் 55 வரையிலான அளவு இயல்பான நிலையையும் 56 முதல் 150 வரையிலான அளவு காற்றில் நுண்துகள்களின் அடர்த்தி அதிகரித்துள்ளதையும் குறிக்கின்றன. ஆறு முக்கிய காற்று மாசுகளின் 24 மணி நேரச் சராசரியைக் கணக்கிடும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 100 வரை இருக்கும்போது காற்றுத் தரம் நன்று முதல் மிதமானது எனக் கருதப்படுகிறது.
மாறாக, அக்குறியீடு 101 முதல் 200 வரை இருக்கும்போது அது ஆரோக்கியமற்றது எனக் கணக்கிடப்படுகிறது. காற்றுத் தரம் ஆரோக்கியமற்றது எனும் அளவைத் தாண்டும் சூழலில், பொதுமக்கள் குறிப்பாக மூத்தோர், சிறுவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் திறந்தவெளி உடற்பயிற்சிகள் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
.png)







English (US) ·