பிரேடல் சாலையில் பேருந்து தீப்பிடித்ததால் போக்குவரத்து நெரிசல்; யாருக்கும் காயமில்லை

23 hours ago 2

பிரேடல் சாலையில் திங்கட்கிழமை (நவம்பர் 23) மாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் உச்சநேரப் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.

தீச்சம்பவம் குறித்து மாலை 6.55 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பேருந்தின் இயந்திரப் பகுதியில் தீப்பற்றியதாகவும் தண்ணீர்ப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீச்சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரவு 8.52 மணியளவில் ‘சிம்ப்ளிகோ’ செயலியில் வெளியிடப்பட்ட பொதுப் போக்குவரத்து நிலவரத் தகவலின்படி, பார்ட்லி சாலையை நோக்கிச் செல்லும் பிரேடல் சாலையில் எட்டுப் பேருந்துச் சேவைகள் 50 நிமிடங்கள் வரை தாமதமாகின என்றும் மேலும் இரண்டு பேருந்துச் சேவைகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ‘ரெடிட்’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்றில், பேருந்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதையும் அதன் அருகே மற்ற கார்கள் மெதுவாகக் கடந்து செல்வதையும் காண முடிந்தது. தீ அணைக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டு அதே தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில், அந்தப் பேருந்து முற்றிலும் எரிந்துபோன நிலையில் காட்சியளித்தது.

Read Entire Article