பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை... சேலத்தில் பரபரப்பு

10 hours ago 1

Last Updated:Oct 26, 2026 1:30 PM IST

சேலத்தில் பிரபல ரவுடி டேவிட் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் ரவுடி வெட்டி கொலை
சேலத்தில் ரவுடி வெட்டி கொலை

சேலத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் (40) ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று டேவிட் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 3 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் புதுரோடு மேம்பாலத்தில் டேவிட்டின் வாகனத்தை வழி மறித்துள்ளது. அப்போது பாலத்தை தாண்டி தப்பியோட முயன்று தடுக்கி விழுந்த டேவிட்டை அந்தக் கும்பல் சுற்றி வளைத்து சராமாரியாக வெட்டியதில் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் உடனடியாக சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் பாஸ்கரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டேவிட் மீது கடந்த மாதம் மத்திய பொருளாதார குற்றப்பிரிவில் ரூபாய் 65 லட்சம் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று வந்த நிலையில் கொலை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article