Last Updated:November 24, 2026 8:10 PM IST
இதற்கிடையே, இன்று மாலை வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 'ஜான் டோ' என்றால் என்ன, இப்படி ஒரு பெயரில் உத்தரவு இருக்கிறதா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம் கடைசி நேர பரபரப்பை எட்டியுள்ளது. பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கல் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்தது.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட அவசர வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை என்ற நீதிபதிகள், பக்தர்களின் அடிப்படை உரிமைக்கு 144 தடை உத்தரவு குறுக்கே நிற்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அத்துடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுமாறு பொதுமக்கள் யாரும் அழைப்பு விடுக்கக் கூடாது எனக் கூறி, 'ஜான் டோ' (John Doe) என்ற தடை உத்தரவையும் பிறப்பித்தனர்.
இதற்கிடையே, இன்று மாலை வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 'ஜான் டோ' என்றால் என்ன, இப்படி ஒரு பெயரில் உத்தரவு இருக்கிறதா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
வழக்கமாக நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டால், யார் மீது குற்றம் சாட்டப்படுகிறதோ அவர்களின் பெயர், முகவரி தெளிவாக இருக்கும். நீதிமன்றமும் அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகவே உத்தரவிடும். ஆனால், விதியை மீறப் போகிறவர்கள் யார் என்றே முன்கூட்டியே தெரியாத இக்கட்டான சூழலில் 'ஜான் டோ' உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
'ஜான் டோ' என்பது எந்தவொரு தனிநபரின் பெயரல்ல. அடையாளம் தெரியாதவர்களைக் குறிக்கச் சட்ட உலகில் பயன்படுத்தப்படும் ஒரு கற்பனைப் பெயர். சுருக்கமாகச் சொன்னால், தவறு செய்ய வாய்ப்புள்ள அடையாளம் தெரியாத நபர்கள் அனைவருக்கும் சேர்த்துப் போடப்படும் ஒட்டுமொத்தத் தடை இது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாராவது தடையை மீறினால், அப்போது அவர்களின் உண்மையான பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விநோதப் பெயருக்குப் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான சுவாரசிய வரலாறு உண்டு. 14-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் எட்வர்ட் காலத்தில்தான் இந்த வழக்கம் தொடங்கியதாக தெரிகிறது. சொத்துத் தகராறு வழக்குகளில் எதிர்தரப்பினர் யார் எனத் தெரியாதபோது, அவர்களைக் குறிக்க 'ஜான் டோ' என்ற பெயரை நீதிமன்றங்கள் பயன்படுத்தின. பின்னர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளின் சட்ட நடைமுறைகளுக்கும் இது பரவியது.
இந்தியாவில் முதற்முறையாக 2002-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் போது இந்த உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. ஒளிபரப்பு உரிமம் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்குத் தெரியாமல், நாடு முழுவதும் பல உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் போட்டிகளை சட்ட விரோதமாக ஒளிபரப்பினர். அத்தனை பேரையும் தேடிக் கண்டுபிடித்துப் பெயர் சேர்டது சட்டத்தின் முன் கொண்டு வர முடியாது. அப்போதுதான் முதன்முறையாக டெல்லி உயர் நீதிமன்றம் 'தாஜ் டெலிவிஷன்' வழக்கில் 'ஜான் டோ' உத்தரவைப் பிறப்பித்தது. காலப்போக்கில் இதற்கு இந்திய நீதிமன்றங்கள் ஓர் உள்ளூர் முகத்தையும் கொடுத்தன. 'ஜான் டோ' என்பதற்குப் பதிலாக, அடையாளம் தெரியாதவர்களைக் குறிக்க 'அசோக் குமார்' என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கின. அதனால்தான் இந்தியச் சட்ட வட்டாரத்தில் இதனை 'அசோக் குமார் உத்தரவு' என்றும் அழைப்பதுண்டு.
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது தயாரிப்பாளர்கள்இந்த உத்தரவைக் கோரி நீதிமன்றம் செல்வதுண்டு. எந்தெந்த இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே, அடையாளம் தெரியாத அனைத்து இணையதளங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தத் தடை பெறுவார்கள். சமீப ஆண்டுகளில் அமிதாப் பச்சன் போன்ற திரைப் பிரபலங்களும் இதன் உதவியை நாடினர். செயற்கை நுண்ணறிவு மூலம் தங்கள் புகைப்படத்தையும் குரலையும் அடையாளம் தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 'ஜான் டோ' உத்தரவுதான் கைகொடுத்தது.
அதேசமயம், இந்த உத்தரவைப் பயன்படுத்துவது குறித்துச் சட்ட வல்லுநர்களிடையே கடும் விவாதமும் உண்டு. 1908-ஆம் ஆண்டின் சிவில் நடைமுறைச் சட்டப்படி, ஒரு வழக்கில் எதிர்மனுதாரர் யார் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுவது அவசியம். ஆனால், 'ஜான் டோ' உத்தரவு அந்த அடிப்படை விதியையே தாண்டிப் போவதாகச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். யாரைக் குறிவைக்கிறது என்ற தெளிவான எல்லை இல்லாததால், இது சில நேரங்களில் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடும் என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

தொப்பை கொழுப்பு சட்டென குறைய, 3 வேளையும் சாப்பிட்டவுடன் இதை செய்யுங்க!
தொப்பையில் உள்ள விடாப்பிடியான கொழுப்பால் அவதிப்படுகின்றீர்களா?
எனில் 3 வேளையும் சாப்பிட்டவுடன் இதை மட்டும் செய்யுங்கள்.
எளிதாக கொழுப்பு கரைந்துவிட இது உதவும்.
.png)








English (US) ·