Last Updated:Oct 31, 2026 6:23 PM IST
தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனைகள் நடப்பதுபோல வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை, திருமங்கலத்தில் உள்ள பெரியார் சமுதாய நலக்கூடத்தில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கான பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை மாநகர ஆணையர் சமரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது; “சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய பணியை நான் செய்து வருகிறேன். மாமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடமாக என்ன பணி செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் கூட மேயர் உள்பட அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருந்தோம். அனைவரும் தங்களுடைய பணியை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். குற்றச்சாட்டுகள் சொல்ல வேண்டிய இடத்தில் அவர்கள் உள்ளனர்; அதை சரி செய்ய வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். மழை பிரச்சனை வரும் பொழுது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த ஆட்சியில் காவல்துறை யார் கட்டுப்படுத்தினார்கள் என்பதை வெளியிட வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சரின் மருமகன் என யார் கட்டுப்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். உதயநிதி ஆதரவில் இருந்த ரத்தீஷ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் மாவட்ட கண்காணிப்பாளர்களை பணி இட மாற்றம் செய்து காவல்துறையை குடும்ப கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவற்றை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் புணரமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: “முடிந்துவிட்டது நண்பா” - ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்
திமுக மகளிர் அணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். மகளிர் இல்லாமல் மகளிர் அணி கூட்டமும், இளைஞர்களே இல்லாமல் இளைஞர் அணி கூட்டமும் நடத்துவார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தினமும் இரண்டு வீடியோ வெளியிட்டு எங்களை திட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதை தான் செய்து கொண்டிருக்கிறார். தாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நினைத்துக் கொண்டிருந்தனர். இன்னும் அதே கனவில் இருப்பதால் பெரிய பிரச்சனைகள் நடப்பது மாதிரி மக்களிடம் கெட்ட பெயரை உருவாக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சர் பேசாமல், செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் இல்லாமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திட்டங்களை செயல்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எத்தனை வீடியோ போட்டு பொய் பரப்புரை செய்தாலும் மக்கள் பிரச்சனையை சரி செய்வதற்கு திட்டங்களை செயல்படுத்துவது என முதலமைச்சர் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது தற்காலிகமாக பேட்ச் ஒர்க் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளை முழுமையாகச் சீரமைப்பதற்கான புதிய டெண்டர்கள் விடப்பட்டு, அடுத்த ஆண்டு மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து சாலைகளும் முறையாகச் சீரமைக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
.png)






English (US) ·