திண்டுக்கல்: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கோவில்களில், அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 கோவில்களின் அதிகாரபூர்வ பட்டியலை அறநிலையத் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆண்டுக்கு ரூ.233.50 கோடி வருவாய் ஈட்டி, மாநில அளவிலேயே முதல் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.941.99 கோடியாகும்.
அதிக வருவாய் ஈட்டிய முன்னணி கோவில்களின் பட்டியலில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ரூ.139.06 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.131.38 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ரூ.111.09 கோடி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.74.98 கோடி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ரூ.73.72 கோடி வருவாயுடன் நான்கு, ஐந்து, ஆறாம் இடங்களில் உள்ளன.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ரூ.64.33 கோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் ரூ.50.57 கோடி, மதுரை கள்ளழகர் கோவில் ரூ.34.20 கோடி, ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் ரூ.29.16 கோடி வருவாயுடன் 7 முதல் 10ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.
நாள்தோறும் கோவில்களுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, அன்னதானத் திட்டங்கள், தூய்மைப் பணிகளுக்கு இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.png)







English (US) ·