டெல்லி விமான நிலையத்தில் 10 ரூபாய்க்குத் தேநீர், குடிநீர்; 20 ரூபாய்க்குப் பலகாரம்

10 hours ago 2

புதுடெல்லி: இந்திய விமான நிலையங்களில் விற்கப்படும் பானங்கள், உணவு வகைகளின் விலை மிக அதிகமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், அப்புகார் தொடர்பாக இந்தியப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் மலிவு விலையில் உணவு, பானங்களை வழங்கும் ‘உடான் யாத்ரி கேஃபே’ (Udan Yatri Cafe) தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமானப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் இந்தப் புதிய உணவகம் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. விரைவில் முதலாவது, இரண்டாவது முனையங்களிலும் புது உணவகங்கள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்திய விமான நிலையங்களில் ஒரு கோப்பைத் (கப்) தேநீர் அல்லது காபியின் விலை 250 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலையில், 10 அல்லது 20 ரூபாய்க்குத் தரமான சிற்றுண்டிகள் கிடைப்பது நடுத்தரப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, விமானத்தில் ஏறும் முன் அவசரமாகக் குடிப்பதற்கு10 ரூபாய்க்குத் தேநீர் கிடைப்பது மிக வசதியாக உள்ளது எனப் பயணிகள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சமோசா, வடை பாவ், இனிப்பு வகைகள் போன்றவை 20 ரூபாய்க்கும் குடிநீர்ப் புட்டி 10 ரூபாய்க்கும் விற்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

நாடெங்கும் மலிவு விலை உணவகங்களை விரிவுபடுத்தும் திட்டத்தின்கீழ், முதன்முதலில் கோல்கத்தா விமான நிலையத்திலும் (டிசம்பர் 2024), அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் இந்த உடான் உணவகங்கள் தொடங்கப்பட்டன.

Read Entire Article