சுவா சூ காங் விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

18 hours ago 1

சுவா சூ காங்கில் திங்கட்கிழமை (நவம்பர் 23) மாலை உச்சநேரத்தில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 61 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

சுவா சூ காங் வேயில் நேர்ந்த விபத்து குறித்து அன்றைய நாள் மாலை 6 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் செவ்வாய்க்கிழமை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தன.

நினைவிழந்த நிலையில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி பின்னர் உயிரிழந்தார். மரணம் விளைவிக்கும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

இதற்கிடையே, நவம்பர் 21ஆம் தேதி இரவு ஹவ்காங்கில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட மற்றொரு விபத்தில் மூவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஹவ்காங் அவென்யூ 2 நோக்கிச் செல்லும் ஹவ்காங் அவென்யூ 3ல் இரவு 10.40 மணியளவில் மூன்று கார்கள் மோதிய விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அன்றைய நாள் இரவு 10.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

61 வயது கார் ஓட்டுநரும் காரில் இருந்த 30, 59 வயதுடைய இரு பெண்களும் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு காரை ஓட்டிய 28 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

Read Entire Article