சென்னை, அக். 26-
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, தமிழகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி நாளைத் தவிர, பிற மாதங்களில் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமி தினத்தில் மட்டும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்ன அலங்காரத்தில் சிவனை வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். வழிபாட்டின் பலன் மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை கோவில் குளங்களிலும் ஆறுகளிலும் கரைப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில், கொரட்டூர் ஏகாந்த லிங்கேசுவரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று மாலை 6 மணி முதல் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இரவு பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள குபேர லிங்கத்திற்கு 40 படி அரிசி சாதம் வடித்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. காய்கறிகளால் குபேர லிங்கத்திற்கு மாலை மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப்பள்ளியில் உள்ள சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், மூலவர் வால்மீகேசுவரருக்கு அன்னப்பிரசாத அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கோவில் அர்ச்சகர்களும் பக்தர்களும், கோவில் வளாகத்தில் உள்ள புனித தீர்த்தத்தில் சிறிது அன்னப்பிரசாதத்தை கலந்தனர். விவசாயம் செழிக்கவும், மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் இந்தப் பூஜை ஆண்டுதோறும் செய்யப்படுகிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.