சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியீடு

4 hours ago 2

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசிய நூலகத்தின் ஆதரவோடு நடத்திய முனைவர் கோட்டி திருமுருகானந்தம் தொகுத்துள்ள சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியீடு கண்டுள்ளது.

மொத்தம் 1,224 பக்கங்களுடன் மூன்று தொகுதிகளாகச் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் அக்டோபர் 3ஆம் தேதி மாலை நடைபெற்றது.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டாரச் சமூக மேம்பாட்டு மன்ற மேயருமான திரு தினேஷ் வாசு தாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“சிங்கப்பூர்க் கவிதைகளின் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு இந்நூல் ஒரு பெருங்களஞ்சியமாக அமையும். சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகள் உலகம் முழுவதும் அறியப்படுவதற்கும் இந்த நூல் உதவும்,” என்று அவர் கூறினார்.

“இந்தக் கவிதைக் களஞ்சியம் எதிர்கால ஆய்வாளர்களுக்குப் பெருந்துணையாக இருக்கும். குறிப்பாக, மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இதன்மூலம் பயன்பெறுவர் என்று உறுதியாகக் கூறலாம்,” என்று தலைமையுரையாற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் முனைவர் சுப.திண்ணப்பன் புகழாரம் சூட்டினார்.

ஆண்பாற் கவிஞர்கள் மட்டுமன்றிப் பெண்பாற்கவிஞர்களின் கவிதைகளும் இதில் உள்ளன. இளையர் முதல் முதியோர்வரை ஏறக்குறைய 400 கவிஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளும் உண்டு. காலவரிசையில் சிங்கப்பூர்க் கவிதை நூல்கள், சிங்கப்பூர் இதழ்கள் என இரு அட்டவணைகள் தரப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் களஞ்சியத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர்தம் ஆய்வுரையில் புலம்பெயர் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைப் போக்கு, களஞ்சியம் சிறப்பு, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தின் சிறப்பு எனச் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை முழுமையாக அரங்கத்தினர்க்கு உணர்த்தினார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் வாழ்த்துரையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்தும் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை குறித்தும் கருத்துரைத்தபின் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைக் களஞ்சியச் சிறப்பைப் புகழ்ந்து உரைத்தார்; தொகுப்பாசிரியரின் உழைப்பைப் பாராட்டினார்.

துணையமைச்சர் களஞ்சியத்தை வெளியிட, முதல் படியைத் தொகுப்பாசிரியரின் மாணவரும் தமிழாசிரியர் சங்கச் செயலாளருமான முனைவர் முகைதீன் நிசார் அன்வர் பெற்றுக்கொண்டார்.

இந்தக் கவிதைக் களஞ்சியத்தை உருவாக்கியதில் தமக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிய அனைவர்க்கும் திரு கோட்டி முருகானந்தம் நன்றிதெரிவித்துக்கொண்டார்.

Read Entire Article