சட்டவிரோதமாக உணவு விநியோகம்: ஐவர்மீது குற்றச்சாட்டு

23 hours ago 1

உரிய பணி அனுமதியின்றி சட்டவிரோதமாக உணவு விநியோகப் பணியில் ஈடுபட்ட இரு வெளிநாட்டவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூன்று சிங்கப்பூரர்கள் மீதும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியரான சான் சிக்கீன், 35, சீன நாட்டவரான ஜாங் ஜியாக்கி, 28, ஆகிய இரு வெளிநாட்டவர்களும் சிங்கப்பூரர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட டெலிவரூ, கிராப்ஃபுட், ஃபுட்பாண்டா ஆகிய தளங்களின் கணக்குகளைப் பயன்படுத்தி உணவு விநியோகத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

உரிய பணி அனுமதியின்றி சுயதொழில் புரிந்ததாக வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எர்னஸ்ட் ஓங் கி சியாங், 28, டான் டெக் லை, 26, முகம்மது ஜஃப்ரான் முகமது நசீர், 35, ஆகிய மூவர்மீது உணவு விநியோகக் கணக்குகளைப் பயன்படுத்த வெளிநாட்டினர்க்கு உதவியது, கணக்குச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் கட்டணம் பெற்று மற்றொருவரின் கணக்கை வெளிநாட்டவர் பயன்படுத்த ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. டான் டெக் லைமீது ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்ற சதி செய்ததற்கான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் உடந்தையாக இருப்போருக்கும் $20,000 வரை அபராதம் அல்லது ஈராண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் பணிபுரியத் தடைவிதிக்கப்படும்.

சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்கள் ‘விதிமீறல் குறித்துப் புகாரளியுங்கள்’ (Report an Infringement) மின்னணுச் சேவை மூலம் புகார் அளிக்கலாம். தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Entire Article