ஆலயங்களிலும் இசையரங்கிலும் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் அவற்றையும் கடந்து மாறுபட்ட சூழல்களிலும் ரசிக்கலாம் என இசைக்கலைஞர்கள் சிலர் செய்துகாட்டவுள்ளனர்.
உள்ளூர் இசை நிறுவனமான ‘த சம் தத்துவம்’ (The Sum Tattvam) ஏற்பாடு செய்துள்ள ‘கச்சேரி இன் எ ‘கஃபே’ (Kutcheri in a Kafé), காப்பி அருந்திக்கொண்டே செவ்விசையைச் சுவைக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
‘பிரிகோலேஜ்’ (Bricolage) கஃபேயில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) இந்தக் கச்சேரி நடைபெறவுள்ளது.
வழக்கமான மேடை அனுபவங்களைப் போலன்றி, பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு மிக அருகில் அமர்ந்தபடி இசையை ரசிக்க முடியும்.
இந்தக் கச்சேரியில் மிருதங்கக் கலைஞர் சாய் அகிலேஷ்வர், பாடகர் சாய் விக்னேஷ்வர், வயலின் கலைஞர் ஸ்ரீரஞ்சனி முத்து சுப்பிரமணியன், ‘டபுள் பேஸ்’ கலைஞர் டாக்டர் டோனி மகாரோமே எனப் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
உள்ளூர் இசைக்கலைஞர்களான லலித் குமார், வர்ஷா விஸ்வநாத் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘த சம் தத்துவம்’ நிறுவனம், இந்தியப் பாரம்பரியக் கலைப் படைப்புகளின் எல்லைகளை விரிவாக்க முற்படுகிறது.
கதைசொல்வதையும் தொழில்நுட்பத்தின் ஆற்றலையும் இணைத்து இந்தியச் செவ்வியல் கலைகளின் செழுமையான மரபைக் கொண்டாடும் வகையில், மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதில் அது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
‘த ஆர்ட்ஸ் ஹவுஸ்’ அரங்கில் நிகழ்ச்சி படைத்தபோது, காப்பி குடிப்பதற்காக வெளியே வந்து ‘பிரிகோலேஜ்’ கடையைப் பார்த்த பிறகே இந்தக் கச்சேரிக்கான யோசனை உதித்ததாக ‘தி சம் தத்துவம்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் லலித் குமார் தெரிவித்தார்.
“இதமான, அழகான சூழலைக் கொண்ட அந்த அமைதியான காப்பிக்கடையைக் கண்டதும் இங்கேயே கச்சேரி ஒன்றை நடத்தலாமே என்ற சிந்தனை என்னுள் தோன்றியது. பதற்றமில்லாத, நீக்குப்போக்கான வாழ்க்கைமுறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் இத்தகைய கடைகளுக்கு உண்டு,” என்று அவர் கூறினார்.
சிற்றுண்டி, காப்பியோடு இசையை ரசித்து, பார்வையாளர்கள் மன அமைதியுடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் தாம் விரும்புவதாகவும் லலித் குமார் குறிப்பிட்டார்.
.png)







English (US) ·