உள்நாட்டுச் சரக்குகளைக் கையாள்வதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாதனை

17 hours ago 1

தூத்துக்குடி: நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்தில் 83.53 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 32.27 விழுக்காடு வளர்ச்சி ஆகும்.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டுச் சரக்குக் கையாளுதல் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 63.15 லட்சம் டன்னாக இருந்த உள்நாட்டுச் சரக்கு, நடப்பாண்டில் 83.53 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முக்கியமாக, உள்நாட்டு நிலக்கரி கையாளுதல் 50.58 விழுக்காடு உயர்ந்து 67.04 லட்சம் டன்னாகவும் உலோகக் கசடு (Slag) கையாளுதல் 67.74 விழுக்காடு உயர்ந்து 2.11 லட்சம் டன்னாகவும் பதிவாகியுள்ளது.

இதேபோல், துறைமுகத்துக்கு வரும் உள்நாட்டுக் கப்பல்களின் எண்ணிக்கையும் 123ல் இருந்து 170ஆக உயர்ந்து, 38.21 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

துறைமுகத்தின் ஒட்டுமொத்தச் சரக்குக் கையாளுதல் 260.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், அதில் உள்நாட்டுச் சரக்குகளின் பங்கு 32.06 விழுக்காடாக, அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது.

கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளைக் கையாண்டு, இந்தியத் தொழில்துறையின் போட்டித்திறனை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த்குமார் புரோகித் தெரிவித்துள்ளார்.

Read Entire Article