உள்கட்டமைப்பில் தனியார் ஆதிக்கம் ரூபாய் 99 லட்சம் கோடி திட்டங்களை செயல்படுத்தும் தனியார் துறை

1 hour ago 1

புதுடில்லி, அக். 24- நாட்டின் முன்னணி கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது வணிக விரிவாக்கத்துக்காக புதிய தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் தரவு மய்யங்கள் முதலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக அதிகாரப்பூர்வமாகத் திட்டமிட்டு, செயலாக்க வரிசையில் வைத்துள்ளள்ள திட்டங்களின் மொத்த மதிப்பே ‘தனியார் முதலீட்டுத் திட்டம்’ என அழைக்கப்படுகிறது.

இது பங்குச்சந்தை அல்லது பரஸ்பரநிதிகளில் தனிநபர்கள் மேற்கொள்ளும் வழக்கமான முதலீடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாகும். அரசு இயந்திரத்தை தொடர்ந்து தேசத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதன்மை உந்துசக்தியாக இந்தத் திட்டங்களே கருதப்படுகின்றன.

ஒன்றிய அரசின் ‘வளர்ச்சி அடைந்த இந்தியா 2047’ இலக்கை நோக்கி, நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்கட்டமைப்புத் திட்டங்களில் வரலாறு காணாத வகையில் பணத்தைக் கொட்டி வருகின்றன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவின் தனியார் மூலதனச் செலவினத் திட்டம் இந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, ஆண்டுக்கு 39 சதவீத அசுர வளர்ச்சி அடைந்து ரூ.99.7 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்தத் திட்டங்களின் மதிப்பு 87 சதவீதம் வரை கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது இந்தியப் பொருளாதாரத்தின் அசுர வேகத்தைக் காட்டுகிறது.

மிக முக்கிய உந்துசக்தியாக டிஜிட்டல் மற்றும் அய்.டி. சேவைகள் ஒரே ஆண்டில் ரூ.16.8 லட்சம் கோடியை கூடுதலாக ஈர்த்துள்ளன. இதன் மூலம் இத்துறையின் மொத்த முதலீட்டுத் திட்டம் ரூ.18.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் தொழில்துறை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாரம்பரிய மின்சார துறையில் கூடுதலாக ரூ.7.6 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த உட்கட்டமைப்புத் திட்டங்களில், உற்பத்தித் துறை ரூ.41.3 லட்சம் கோடியுடன் (41.4 சதவீதம்) முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மின்சாரத் துறை ரூ.32.2 லட்சம் கோடியுடன் (32.3 சதவீதம்) 2ஆம் இடத்திலும் நீடிக்கின்றன. புதிய முதலீட்டு வளர்ச்சியில் 94 சதவீத பங்கினை மராட்டியம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article