கென்யாவில்
190 குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற பாதிரியார்
நைரோபி அக். 23- கென்யாவில் 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைப் பட்டினிப் போட்டுப் படுகொலை செய்த வழக்கில், ‘குட்நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ (Good News International Church) அமைப்பின் தலைவரான மதபோதகர் பால் மக்கென்சி (Paul Mackenzie) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 28 பேர் குற்றவாளிகள் என மொம்பாசா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கென்யாவின் ஷககோலா காட்டுப் பகுதியில் 800 ஏக்கர் பரப்பில் மக்கென்சியின் சபை அமைந்துள்ளது. தன்னைத் தானே மத போதகர் என அறிவித்துக்கொண்ட இவர் “இயேசுவை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினி இருந்து உயிரை விட வேண்டும்” என தனது ஆதரவாளர்களுக்குப் போதனை செய்துள்ளார்.
முறையான கல்வியும், நவீன மருத்துவச் சிகிச்சைகளும் “சாத்தானின் வழிமுறைகள்” எனக் கூறி, ஆதரவாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அவர் தடை செய்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய மாலிண்டி (Malindi) நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இதுவரை 400 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 191 உடல்கள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறரும் பட்டினி இருந்தே இறந்திருக்கலாம் என சூழல் அடிப்படையிலான சாட்சிகள் மூலம் உறுதியானது.
முதலில் குழந்தைகள்,பின் பதின்ம வயதினர், பெண்கள், ஆண்கள் என பட்டினி இருந்து இறப்பதற்கு படிநிலை வகுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மக்கென்சி யும் அவரது ஆதரவாளர்களும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கான தண்டணையை நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.
சூடான் உள்நாட்டு போரில்
டிரோன் தாக்குதல்
உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்வு
கார்ட்டூம், அக். 23- சூடானில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இத்தகையப் போர் பதற்றத்துக்கு மத்தியில், சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை பகுதியான ‘அபியே’ என்ற எண்ணெய் வளம் மிக்க பகுதியில் உள்ள சந்தையை குறிவைத்து, சூடான் ராணுவத்தினர் டிரோன் விமானங்கள் மூலம் அடுத்தடுத்து குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த குண்டுகள், சந்தையில் இருந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததால் பெரும் தீக்கிரையானது. இதில் 73 அப்பாவிப் பொதுமக்கள் பலியான நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சந்தை பகுதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய வான்வழித் தாக்குதல்களுக்கு அய்க்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திபெத்தில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு
நாகு, அக். 23- திபெத்தில் நேற்று (22.10.2026) மாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மய்யத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.33 மணிக்கு வடக்கு திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது.
இந்த நடுக்கத்தால் அந்தப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. காயமடைந்தவர்களில் 11 பேருக்கு பலத்த காயமும், 21 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, அந்தப் பகுதிகளில் அவசரகாலக் கட்டளை மய்யம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டப் பகுதிகள் வழியாக ரயில் சேவைகளை ரயில்வே அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவென்றும் சீன அரசின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
.png)
1 hour ago
1







English (US) ·