வாஷிங்டன்: ஈரானுடன் புதிய உடன்பாட்டை எட்டுவதா அல்லது தாக்குதல்களை மீண்டும் முழுவீச்சில் தொடங்குவதா என்பது பற்றி மிக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கர்களுக்கு எதிராக ஈரான், ஏமன் நாட்டின் ஹூதிக் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ என்னால் மிக எளிதாகத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் அல்லது ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த முடியும்,” என்று திரு டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, பாரசீக வளைகுடாவை நோக்கி மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் படைப்பிரிவு உள்ளிட்ட கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
“இன்று தாக்குதல் ஏதும் நடைபெறாது,” என அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹூதிக் கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அந்த விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) வணிகரீதியான பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
அதேபோல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் தனது ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. இதனால் கப்பல்கள்மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் அக்டோபர் 23ஆம் தேதி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு எதிராகவும் பதிலடித் தாக்குதல்களை நடத்த ஈரான் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் திடீர் பயணம் மேற்கொண்டு இஸ்ரேலியப் பிரதமரைச் சந்தித்துள்ளார்.
அங்கு அக்டோபர் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் போர் மூளும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தேர்தலில் தோல்வியடைந்தால் அவரது முக்கியப் போட்டியாளரான காடி ஐசன்கோட் போரைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டமாட்டார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
.png)







English (US) ·