திருநெல்வேலி: நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ எனும் புதிய நற்பணி இயக்கம் திங்கட்கிழமை (நவம்பர் 23) தொடங்கப்பட்டுள்ளது.
பேரவையின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தச்சநல்லூர் தொழிலதிபர் ராஜகோபால், நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் அமைப்பின் இலச்சினையை வெளியிட்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.
திரிஷா வணக்கம் செலுத்தும் படத்துடன், ‘பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள அந்த இலச்சினை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
“’சாமி’ திரைப்படத்தில் துணிச்சலான நெல்லைப் பெண்ணாக திரிஷா நடித்தது என்னைக் கவர்ந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறன் திரிஷாவிடமும் உள்ளது. அவரை ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகப் பார்ப்பதாலேயே இப்பேரவையைத் தொடங்கியுள்ளோம்,” என்று மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராஜகோபால் தெரிவித்தார்.
இவ்வமைப்பு அரசியல் சார்பற்ற நற்பணி இயக்கம். அடித்தட்டு மக்களுக்கு அரசுத் திட்டங்கள் சென்றடையவும், சான்றிதழ்கள் பெறவும் உதவும். ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு, சட்ட உதவிக் குழு ஆகியவற்றுடன் மக்கள் குறைகளைத் தெரிவிக்க இணையத்தளம் உருவாக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்கள் தலைவிதான் முடிவெடுப்பார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டால் மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செய்ய முடியும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு,” என்று திரு ராஜகோபால் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிர்வாக விவகாரங்களில் நடிகை திரிஷாவின் பெயர் அடிபடும் நிலையில், அவருக்கு ‘இளைய புரட்சித்தலைவி’ பட்டம் சூட்டப்பட்டுப் பேரவை தொடங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிரான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆலோசகர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நவம்பர் 20ஆம் தேதி த்ரிஷாவைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
இச்சூழலில், முன்னர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘இளைய புரட்சித்தலைவி’ பட்டம் தற்போது த்ரிஷாவுக்குச் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘தியாகச் சுடர் த்ரிஷா பேரவை’ படங்கள் பரவிய நிலையில், திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள இப்பேரவை திரிஷாவின் சம்மதத்துடன் உருவாக்கப்பட்டதா என்பது உறுதியாகவில்லை.
1983ல் கல்லூரி மாணவர்களால் ரகசியமாகத் தொடங்கப்பட்ட ‘ஜெயலலிதா நற்பணி மன்றமே’ பிற்காலத்தில் ‘அம்மா பேரவையாக’ உருவெடுத்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், தற்போதைய நிகழ்வு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
.png)





English (US) ·