புதுடெல்லி: தமது கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடப் போவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தின் பில்டி நகரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பாரத் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய திரு மோடி, பொதுச் சேவைக்கான தமது அர்ப்பணிப்பு எப்போதுமே அசைக்க முடியாததாக இருக்கும் என்றார்.
“என் வாழ்வின் கடைசித் தருணம் வரை மக்கள் சேவையிலேயே என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்,” என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் பாஜக அரசு குறித்து விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த கருத்தைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய அவர், நாட்டின் இன்னல்களில் சிலர் மகிழ்ச்சி காண்பதாகவும் தமது அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்காக அவர்கள் வதந்திகளைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஈரான் போருக்குப் பிறகு, விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு மக்கள் சிரமப்படுவார்கள் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார்.
தமது அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் உலகளவில் அதிகரித்துவிட்ட உர விலைகளின் சுமை விவசாயிகள் மீது விழாமல் பார்த்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவில் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார்.
பொது வாழ்வில் தாம் பணியாற்றிய 25 ஆண்டுகளைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “அக்டோபர் 7ஆம் தேதியுடன் நான் பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். ஆனால், 2001 அக்டோபரில் நான் முதன்முதலில் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற தருணம் நேற்று நடந்ததுபோலத் தோன்றுகிறது,” என்றார்.
.png)







English (US) ·