இந்தியாவின் அருணாசலம் மாநிலத்தை ஒட்டி உள்ள இந்திய – சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) தற்போது சில மோதல்கள் நடந்து வருவதாகவும், அதற்குச் சீனாவே காரணம் எனவும் இந்தியத் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.
இந்திய – சீனத் துருப்புகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதம் முதற்கொண்டே மோதல்கள் நடந்து இருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரப்பிலிருந்து சில விளக்கங்கள் தரப்பட்டவாறு உள்ளன.
எல்லையில் தொடரும் மோதல்கள்
இந்திய – சீனா நாடுகளிடையேயான பிரச்சினைகள் தொடர் நிலைகளைப் பெற்றனவாகும்.
1950ஆம் ஆண்டில் சீனா திபெத்தில் தனது ஆக்கிரமிப்புச் செயல்களை வெளிப்படை ஆக்கியது. 1959ஆம் ஆண்டில் வேகமான சீன நாட்டின் ஆக்கிரமிப்பு – ஒடுக்கு முறைக்கு எதிராக வெகுண்டெழுந்த திபெத்திய மக்கள் தீவிரக் கிளர்ச்சியில் இறங்கினர். சீன ஆட்சியாளர்களால் குறி வைக்கப்பட்ட திபெத்திய புத்த மதத் தலைவர் இந்தியாவின் உதவியை நாடினார். தஞ்சம் அடைந்த அவருக்கு இந்தியா புகலிடம் கொடுத்தது. தமது உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக இந்தியா மீது சீனா எதிர்ப்புக் காட்டியது.
1957இல் திபெத்தையும், ஜின்ஜியாங்க் மாகாணத்தையும் இணைப்பதற்கு ஏதுவாக சீனா அக்சாய்சின் என்னும் பகுதியில், பாலைவனத்தில் இராணுவப் போக்குவரத்திற்கு உகந்ததொரு சாலையை இரகசியமாக அமைத்து வந்தது. இதனை அறிந்ததும் இந்தியா இதற்கு எதிர்ப்புக் காட்டியது. இரு நாடுகளிடையே மோதல் வலுப்பெறுவதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது.
1961ஆம் ஆண்டில் சீனாவின் எல்லைப் பகுதிகளின் மீதான ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கு இந்தியா, முன்னோக்குக் கொள்கை (Forward Policy) என வகுத்தது. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளையும் துல்லியமாகக் கண்டறிந்தது. தற்காலிகக் காவல் சாவடிகளை (Military Outpost) அங்கெல்லாம் அமைத்து ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்தியது. இவற்றைத் தன் மீதான தாக்குதல் நடவடிக்கையின் தொடக்கமாக சீன நாடு முடிவு செய்தது.
உச்சக்கட்ட மோதல்
1962ஆம் ஆண்டில் இந்தியா – சீனா நாடுகள் இடையே இருந்து வந்த நீண்டகாலப் பிணக்குகள்,அரசியல் மாச்சரியச் சுழல்கள் ஒன்று கூடிப் பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்தது எனலாம். இந்த ஆண்டின் அக்டோபர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை, ஒரு மாதகால அளவிற்கு இரு நாடுகளிடையே கடும் போர் நடந்தது.
இந்தப் போருக்கு, 1914ஆம் ஆண்டில் சிம்லாவில் நடைபெற்ற உடன்படிக்கை மாநாட்டில், பிரிட்டிஷ் அதிகாரி ஹென்றி மக்மஹோன் என்பவர் வரையறை செய்துத் தந்த எல்லைக் கோட்டு அளவினை சீனா எற்க மறுத்தது முக்கியக் காரணமாகும். சட்டவிரோத அளவீடு என்று சீனா தரப்பினர் உறுதியாக நின்றனர். மேலும், லடாக் பகுதியில் உள்ள அக்சாய்சின் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா குழு உரிமை கோரியது.
இப்போரில் இந்தியா சீனாவின் சில இடங்களையும், சீனா இந்தியாவின் சில இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்டன. 21.11.1962 அன்று ஒருதலைப்பட்சமாக சீனா போர் நிறுத்தம் (Cease Fire) அறிவிப்புச் செய்தது. மேலும், சீன நாட்டின் படையினர், இந்தியாவில் ஆக்கிரமிப்புச் செய்த சில பகுதிகளை விட்டு வெளியேறினர்.
எல்லையின் அடையாளம்
ஆனால், சீனா அக்சாய்சின் பகுதியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குரியதாகக் கொண்டது. இந்தப் போரின் இறுதி விளைவு இது எனவும் கூறலாம். அப்பகுதி இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே தற்போது உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அடையாளம் ஆகும்.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் வெளியுறவுக் கொள்கைக்கும், இந்திய நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கும் இந்தப் போர் ஒரு பாடமாக அமைந்தது. மிகுந்த எச்சரிக்கைத் தேவைக்கான ஓர் உத்வேகத்தையும் தந்தது.
1966ஆம் ஆண்டு இந்தியா – சீனா நாடுகள் இடையே ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் ஓர் ஒப்பந்தம் உருவானது. உலக வரலாற்றில் இது ‘தாஷ்கண்ட் ஒப்பந்தம்’ என முக்கியத்துவம் பெற்றது. சோவியத் யூனியன் நடுநிலை வகித்து – சமரசம் செய்து, இரு நாட்டுத் தலைவர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். இந்திய – சீனா ஆகிய நாடுகள் போரின்போது கைப்பற்றியப் பகுதிகளை அவரவர்களிடம் திருப்பி ஒப்படைப்புச் செய்து கொள்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது. அமைதி ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கில் கடும் சண்டை
2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் (Galvan Valley) இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பு நடந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மிக மோசமான உயிரிழப்புகள் மிகுந்த மோதல் இதுவாகும்.
இந்திய – சீன எல்லைப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே (LAC) சாலைகள், இராணுவ உள் கட்டமைப்புகளை இந்தியா வேகமாக மேம்படுத்தி வந்தது. தம்மை அச்சுறுத்துவதற்கென்றே இந்தியா இம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதாக சீனா குற்றஞ்சாட்டியது. இரு நாட்டுப் படைகளும் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். அவரவர் படைகளைப் பின்வாங்கிக் கொள்வதென முடிவானது.
ஆனால், இந்திய எல்லையின் ரோந்துப் புள்ளி 14 (Patroling Point -14) அருகே சீன இராணுவம் மீண்டும் கூடாரங்களை அமைத்தது. கண்காணிப்புக் கருவிகளையும், கோபுரங்களையும் அந்தப் பகுதியில் அமைத்து வந்தது. 15.6.2020 அன்று இரவு இவற்றை அகற்றிட இந்திய இராவணுவத்தின் ஒரு குழுவினர் அங்குச் சென்றனர். இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதமும், கடும் சண்டையும், கைகலப்பும் ஏற்பட்டது.
1996ஆம் ஆண்டு இந்தியா – சீனா நாடுகள் இடையே ஓர் எல்லை ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி எல்லைக்குள்ளாக 2 கி.மீ. சுற்றளவுக்குள் இரு தரப்பாரும் துப்பாக்கிகளையோ, வெடிப் பொருள்களையோ பயன்படுத்தக் கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டது. இதனால் இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை.
கைவசத்தில் கொடூர ஆயுதங்கள்
ஆனால், சீன இராணுவத்தினர் (PLA) முன்கூட்டியே திட்டமிட்டபடி ஆணிகள் பிணைக்கப்பட்ட இரும்புக் கம்பிகள், கற்கள், முள் கம்பிகள் சுற்றப்பட்ட மரத்தடிகள் போன்ற கொடூரமான ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்தனர். இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 14,000 அடி உயரத்தில், உறைபனிக் குளிரில், காரிருளில் இந்த வீரர்கள் இடையே நடந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. அப்போது பல வீரர்கள் செங்குத்தானப் பாறைகளின் உச்சிகளில் இருந்து தவறி கீழே விழுந்து அப்பனிப் பிரதேசத்தின் கல்வான் ஆற்றின் குளிர்ந்த நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சண்டையில் இரு தரப்பினரிலிருந்தும் வீரர்கள் மடிந்தனர். பலர் காயமடைந்தனர்.
தற்போது, இந்தியா – சீனா நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள அருணாசல மாநிலத்தின் எல்லையில் பல இடங்களில் மோதல் போக்குத் தொடர்வதாக இந்தோ – திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் சத்ருஜீத் கவுர் (ITBP) கூறியுள்ளார். சவுர்யா கமாண்டோ படைப் பிரிவுகள் அதில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டு அவர்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளின் உறவு மேம்படுவது குறித்து விவாதமும் நடைபெற்றுள்ளது.
எங்களிடம் பெற முடியாது
இந்திய வெளியுறவு அமைச்சமும் (MEA) இதில் தலையிட்டு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “சீனப் படைகள் வகுக்கப்பட்டுள்ள ரோந்து முறைகளிலிருந்து விலகும் போது இந்தியா – சீனா எல்லையில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இருப்பினும் அருணாசல மாநில எல்லைப் பகுதிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்ற நம்பகமான மோதல்கள் பற்றி அவர் எதுவும் தெரிவிப்பதாக இல்லை. இது தொடர்பான விவரங்கள் இந்திய இராணுவ பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்துதான் பெற முடியும் என்கின்றார்.
“இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும், நிம்மதியும் நிலவுவது மிகவும் அவசியமானது என்பதை ஒன்றிய அரசும் வற்புறுத்துகின்றது” என்கிறார் அவர்.
ஊடகத்தினரிடம் பதில் அளித்த அவர், “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தவறான கணக்கீடுகளைச் சரி செய்யவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், தவறானப் புரிதல்களைத் தவிர்க்கவும் இரு தரப்பினரும் தங்களது தற்போதைய இராஜதந்திர, இராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு!
சீன நாட்டைப் பொறுத்து இந்தியா வைத்துள்ள கொள்கையும், கவனமும் மிகப் பலவீனமானது என்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. இந்தோ – திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் சத்ருஜீத் கபூர் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தக்ஸிங் அருகே சீன நாட்டின் ஊடுருவல்கள் நடந்ததாக வந்த செய்திகளைக் குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘நிலைமை மிகவும் ஆபத்தானது’ என்று எடுத்துக் காட்டுகின்றார். இந்திய தேசம் ஏன் இருட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும், ரோந்து செல்லும் உரிமை சமரசம் செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இந்தியாவின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலைமைகள், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்பு ஏற்பட்டு, கடுமையானப் பொருளாதாரப் பாதுகாப்புக் கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
“2025 – 2026ஆம் ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறை சாதனை அளவாக 112 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது” என்று காங்கிரஸ் கட்சியினர் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறை கூறுகின்றார்.
சட்டப்படி நடிவடிக்கை உண்டு
சரியான தகவல்களைத் தந்து நிலைமை என்ன என்பதை தெளிவுபடுத்தும் கடமையைச் செய்ய வேண்டிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதனைச் செய்யாதது விசித்திரமான போக்கே ஆகும். இந்நிலையில், ஊடகங்கள், யூ-டியுப்கள், பிற தகவல் சாதனங்கள் மூலம் இதுபற்றித் தவறான தகவல்கள் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ அதிகாரியின் எச்சரிக்கை ஒன்று கடந்த 25.10.2026 அன்று வெளியானது.
செய்தியாளர்களிடம்
சீன அதிகாரி
சீன நாட்டின் தலைநகரமாகிய பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் குவோஜியா குன் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்புக் கோட்டுப் பிரச்சினைகள் பற்றிச் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைக் குறிப்பிட்டார்.
“சீனாவைப் பொறுத்த அளவில் எல்லைப் பாதுகாப்புக் கோட்டுப் பிரச்சினைகளில் – விதிமுறைகளில் காணப்படுகின்றவாறு அதிகாரிகள் அளவிலும், இராணுவ தரப்பினரும் நடந்திட வேண்டுமென்பதில் கவனமாகக் கருத்தூன்றப்படுகின்றது. அவற்றை முழுதாகப் புரிந்து கொண்டுள்ள அளவில்தான், சீன எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் மட்டுமே ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரு நாடுகளிடையேயும் அதிகாரிகள் மட்டத்தில், இராணுவ அளவில் நல்ல வகையில் தொடர்புப் பரிமாற்றங்கள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், மோதல் நிகழ்வுகள் நடந்து வருவதாகப் கூறப்படுவது பற்றி அவர் மவுனம் காட்டியதும் கவனிக்கத்தக்கது. இரு நாடுகளுக்கிடையேயான மாச்சரியங்கள் தீருவது குறித்த நம்பிக்கையின்மைதான் நீடிக்கின்றது.
.png)
8 hours ago
1






English (US) ·