அர்னாப் புயலால் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.4,600 கோடி இழப்பு, ஒன்றியக் குழு நாளை ஆய்வு : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

1 hour ago 1

கோனசீமா, அக்.30 அர்னாப் புயலின் பாதிப்புகளால் ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல், ஆந்திரம் – ஏனம் இடையே கடந்த 28.10.2026 அன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயலினால், ஆந்திரம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோனசீமா மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களுடன் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அர்னாப் புயலால் ஆந்திரம் மாநிலம் முழுவதும் குறைந்தது ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, ஆந்திரத்தில் அர்னாப் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட ஒன்றிய குழுவை நியமிக்குமாறு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று (29.10.2026) கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, புயலின் பாதிப்புகள் குறித்து ஆந்திர அரசு முதல்கட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், வரும் இன்று (30.10.2026) ஒன்றிய குழு ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பப்படுவார்கள் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி யளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், புயலினால் கோனசீமா மாவட்டத்தில் சுமார் 8,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், அவற்றை சீரமைக்கக் கூடுதலாக தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1,000 மின்சாரப் பணியாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மேலும், அர்னாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கோனசீமா மாவட்டங்களை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். முன்னதாக, அர்னாப் புயலால் ஆந்திரத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 57,000 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article