பாரிஸ், அக். 24- அய்ரோப்பாவில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் நிலவிய கடுமையான வெப்பத்தால் 50,391 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘நேச்சர் ஹெல்த்’ இதழில் வெளியாகிஉள்ள இந்த ஆய்வு, அய்ரோப்பாவின் 854 நகரங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட வெப்ப அலைகளையும், வெவ்வேறு வயதினரின் உயிரிழப்புகளையும் கணக்கிட்டுள்ளது.
இதன்படி, அய்ரோப்பாவில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் நிலவிய கடுமையான வெப்பத்தால் 50,391 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 32,619 பேரின் உயிரிழப்புக்கு மனிதர் களால் ஏற்படும் காலநிலை மாற்றமே காரணம். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டில் பதிவான 29,480 பேரைவிட 71 சதவீதம் அதிகமாகும். மேலும், மே மாதத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் நேரிட்ட உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.
ஆய்வில் இடம்பெற்ற 854 நகரங்கள் அய்ரோப்பிய மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தினரையே உள்ளடக்கி யுள்ளதால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர். ஜூன் 17 முதல் ஜூலை 1 வரை நிலவிய தீவிர வெப்ப அலையின்போது மட்டும் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அப்போது வழக்கத்தைவிட 5.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருந்தது.
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 20 முதல் 44 வயதுக்குட்பட்ட 800-க்கும் மேற் பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
நிலக்கரி, எண்ணெய், எரி வாயு போன்ற புதைபடிவ எரி பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதல், கோடை வெப்பத்தை மேலும் ஆபத்தானதாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வெப்ப எச்சரிக்கை அமைப்புகள், குளிரூட்டும் வசதிகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதுடன், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.
.png)
1 hour ago
1






English (US) ·