50 எஸ்எம்ஆர்டி பேருந்துகளில் இதயத்துடிப்பைச் சீர்செய்யும் தானியங்கிக் கருவிகள்

12 minutes ago 1

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 50 பேருந்துகளில் இதயத்துடிப்பைச் சீர்செய்யும் தானியங்கிக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

இதயச் செயலிழப்புச் சம்பவங்களைக் கையாளும் திட்டத்தின்கீழ், பேருந்துச் சேவை எண்கள் 979, 991 ஆகியவற்றில் அந்தக் கருவிகள் இருக்கும்.

இந்த வழித்தடங்களில் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர்கள், அடிப்படை முதலுதவி, தீயணைப்பு, இதய நுரையீரல் உயிர்ப்பிப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் தொடர்புடைய திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முதியோர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் சமூக மருத்துவ நிலையங்களுக்கு அருகிலும் இக்கருவிகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளிலும் இப்பேருந்துகள் இயங்கும்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, எஸ்எம்ஆர்டி, சிங்கப்பூர் இதய அறக்கட்டளை ஆகியவை திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.

மருத்துவ உதவியாளர்கள் வருவதற்கு முன்னர், பேருந்து ஓட்டுநர்களும் பயணிகளும் இக்கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காக்க உதவலாம் என உள்துறை மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.

‘மைரெஸ்போண்டர்’ செயலி மூலம் அழைக்கப்படும் சமூக முதலுதவியாளர்களும் கருவியைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்டோர் திடீர் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சை தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 7 முதல் 10 விழுக்காடு வரை குறையும் எனத் திரு கோ குறிப்பிட்டார்.

“இதனால்தான் உயிர்காக்கும் கருவிகளைச் சமூகத்திற்கு மிக அருகில் கொண்டுசெல்வது முக்கியமாகிறது,“ என்று அவர் மேலும் கூறினார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள், கூட்டுரிமை வீடுகளில் 5,600க்கும் அதிகமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 50 பேருந்துகளுக்கான கருவிகளுக்குச் சிங்கப்பூர் இதய அறநிறுவனம் ஆதரவளித்துள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி, 218 கருவிகளை வாங்குவதற்கான தொகையும் கிட்டத்தட்ட 1 மில்லியன் வெள்ளி நிதியும் அவ்வமைப்பு வழங்கியுள்ளது.

தனியார் குடியிருப்புப் பகுதிகளிலும் விரைவில் இக்கருவிகளைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக அறநிறுவனத் தலைவர் பேராசிரியர் டான் ஹுவாய் சீம் கூறினார். இத்திட்டத்தின்கீழ் ஒன்பதாவது பங்காளியாக எஸ்எம்ஆர்டி இணைந்துள்ளது.

2015 நவம்பரில் எஸ்எம்ஆர்டி டாக்சிகளுடன்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இக்கருவிகள் 540க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

Read Entire Article