Last Updated:Oct 23, 2026 12:50 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் சிக்கிய 5 கூறல் மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ரூ.2 லட்சத்திற்கு வாங்கிச் சென்றனர்.

News18
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் விலைமதிப்புமிக்க 5 கூறல் மீன்கள் சிக்கின. மருத்துவப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இந்த மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் போட்டி போட்டனர். இறுதியில், 5 மீன்களும் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாம்பன் பகுதியில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குச் சென்றனர். அங்கு வழக்கமாகக் கிடைக்கும் நகரை, சீலா, பாறை உள்ளிட்ட மீன்கள், நண்டுகள் மற்றும் கணவாய்களுடன், ஒரு விசைப்படகில் 5 கூறல் மீன்கள் சிக்கின.
கூறல் மீன்களுக்கு சந்தையில் அதிக மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மீன்களின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் ரப்பர் போன்ற அமைப்புடைய 'நெட்டி' என்ற பொருள், ஜெல்லி மிட்டாய்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பொருள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால், கூறல் மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள் போட்டி போட்டனர். இதில், 5 மீன்களும் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சத்திற்கு விற்பனையானதாக மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர், இந்த மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமான மீன்பிடியில் கிடைக்கும் மீன்களுடன், அரிதாகக் கிடைக்கும் விலைமதிப்புமிக்க கூறல் மீன்களும் சிக்கியதால் பாம்பன் மீனவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)







English (US) ·