விண்வெளியில் 49 ஆண்டுகள்: 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வாயேஜர் 1 சாதனை!

5 hours ago 3

1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 (Voyager 1) விண்கலம், தற்போது பூமியிலிருந்து சுமார் 1,600 கோடி மைல்கள் தொலைவில் பயணித்துக்கொண்டிருக்கிறது. 49 ஆண்டுகளைக் கடந்தும் தகவல்களை அனுப்பிவரும் இந்த விண்கலம், தற்போது பூமியிலிருந்து 'ஒரு ஒளி நாள்' (One Light-Day) தொலைவு என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.

ஒரு ஒளி நாள் என்றால் எவ்வளவு தூரம்?

விண்வெளி தொடர்பான செய்திகளில் 'ஒளி ஆண்டு' (Light-Year) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோலத்தான் 'ஒளி நாள்' என்பதும். இது கால அளவு அல்ல; தூரத்தைக் குறிக்கும் அளவீடு.

ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகத்தில் 24 மணி நேரத்தில் ஒளி கடக்கும் தூரம்தான் ஒரு ஒளி நாள். அதாவது, சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் (1,609 கோடி மைல்கள்).

2026 நவம்பர் 18 அன்று காலை 5.16 மணிக்கு (அமெரிக்க கிழக்குக் கடற்கரை நேரம்), வாயேஜர் 1 இந்தத் தொலைவை எட்டியதாக நாசாவின் (NASA) கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த முதல், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற நிலையை இது அடைந்துள்ளது.

Voyager 1

Voyager 1

வாயேஜர் 1-ன் வேகம் மணிக்கு சுமார் 61,000 கிலோமீட்டர். இவ்வளவு வேகத்தில் பயணித்தும் இந்தத் தொலைவை அடைய கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த எல்லை விண்கலத்தின் சுற்றுப்புறத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், மனிதர்கள் உருவாக்கிய ஒரு பொருள் எவ்வளவு தொலைவு சென்றிருக்கிறது என்பதைக் காட்டும் முக்கியமான அளவீடாக இது அமைகிறது.

1977-ல் தொடங்கிய விண்வெளிப் பயணம்

1977 செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வாயேஜர் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. வியாழன், சனி உள்ளிட்ட வெளிப்புறக் கோள்களை நெருக்கமாக ஆய்வு செய்வதே இதன் முதன்மை நோக்கம். வாயேஜர் 1-க்கு இணையாக வாயேஜர் 2 என்ற மற்றொரு விண்கலமும் அதே ஆண்டில் ஏவப்பட்டது.

வாயேஜர் 1, 1979-ல் வியாழன் கோளையும், 1980-ல் சனிக் கோளையும் கடந்து சென்றது. இந்தப் பயணத்தின்போது அந்தக் கோள்களின் வளிமண்டலம், காந்தப்புலம், நிலவுகள் உள்ளிட்டவை குறித்த முக்கியமான தரவுகளையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது.

Voyager 1

Voyager 1

அதன்பிறகு அதன் பயணம் வெளிப்புற விண்வெளியை நோக்கித் தொடர்ந்தது. 2012 ஆகஸ்ட் மாதத்தில் சூரியக் குடும்பத்தைச் சுற்றியுள்ள ஹீலியோஸ்பியர் (Heliosphere) எனப்படும் பாதுகாப்பு எல்லையைக் கடந்தது. சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்கள் உருவாக்கும் இந்தப் பகுதியைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் (Interstellar Space) நுழைந்த முதல் விண்கலம் என்ற பதிவையும் ஏற்படுத்தியது. இன்றுவரை அந்தப் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து தகவல் அனுப்பும் விண்கலங்களாக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 மட்டுமே உள்ளன.

49 ஆண்டுகளாக இயங்கும் தொழில்நுட்பம்

வாயேஜர் 1 விண்கலம் உருவாக்கப்பட்ட காலத்தில் இன்றைய நவீன கணினித் தொழில்நுட்பங்கள் கிடையாது. மிகக் குறைந்த கணினி நினைவகம், எளிமையான கட்டளைகள் மற்றும் தனித்தனிப் பணிகளைச் செய்யும் கணினி அமைப்புகளைக் கொண்டே இது வடிவமைக்கப்பட்டது.

இதன் முக்கியச் சிறப்பு, மாற்று அமைப்புகள் (Backup Systems). ஒரு கணினி அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக மாற்று அமைப்பு செயல்படும்படி விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் உள்ள கணினிகள் சில சிக்கல்களைத் தானாகக் கண்டறிந்து, பாதுகாப்பான செயல்பாட்டு நிலைக்குச் செல்லவும் முடியும். பூமியிலிருந்து ஒவ்வொரு நொடியும் கட்டளைகளைப் பெற முடியாத தொலைவில் இருப்பதால், தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் இந்த எளிமையான வடிவமைப்பே இன்றும் அதன் பயணத்துக்குத் துணையாக உள்ளது.

சூரிய ஒளி இல்லாத இடத்தில் மின் உற்பத்தி

விண்கலம் சூரியனிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால் சூரிய மின்தகடுகளைப் (Solar Panels) பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது சாத்தியமில்லை. இதற்காக வாயேஜர் விண்கலங்களில் கதிரியக்கப் பொருளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Voyager 1

Voyager 1Ai created image

இதில் புளூட்டோனியம்-238 (Plutonium-238) என்ற கதிரியக்கப் பொருள் மெதுவாகச் சிதைவடையும்போது உருவாகும் வெப்பம், மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதற்குப் பயன்படுத்தப்படும் அமைப்பு கதிரியக்க வெப்ப மின்னியற்றி (Radioisotope Thermoelectric Generator - RTG) எனப்படுகிறது.

இதில் நகரும் இயந்திரப் பாகங்கள் இல்லாததால் நீண்ட காலம் செயல்பட முடிகிறது. ஆனால், புளூட்டோனியம் சிதைவடைவதால் காலப்போக்கில் உருவாகும் வெப்பமும் மின்சாரமும் குறைந்துகொண்டே வரும். நாசாவின் கணக்குப்படி, வாயேஜர் விண்கலங்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4 வாட் மின்சாரத்தை இழக்கின்றன. இதனால் தேவையற்ற கருவிகளை அணைப்பது, சில அமைப்புகளின் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

விண்கலத்தைப் பராமரிக்கும் பொறியாளர்கள்

வாயேஜர் 1 விண்ணில் ஏவப்பட்டபோது அதில் 10 அறிவியல் ஆய்வுக் கருவிகள் இருந்தன. மின்சாரப் பற்றாக்குறை மற்றும் செயல்திறன் குறைபாடு காரணமாக அவற்றில் பெரும்பாலானவை அணைக்கப்பட்டுவிட்டன. தற்போது காந்தப்புலத்தை அளவிடும் காந்தமானி (Magnetometer - MAG), பிளாஸ்மா அலைகளை ஆய்வு செய்யும் பிளாஸ்மா அலை துணை அமைப்பு (Plasma Wave Subsystem - PWS) ஆகிய இரண்டு அறிவியல் கருவிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

மின்சாரத்தைச் சேமிப்பதற்காக நாசா பொறியாளர்கள் 2026 செப்டம்பரில் 'பிக் பேங்' (Big Bang) என்ற திட்டத்தைச் செயல்படுத்தினர். இதன் மூலம் விண்கலத்தின் மூன்று கருவிகள் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் மாற்றுக் கருவிகளால் மாற்றப்பட்டன. இது மீதமுள்ள கருவிகள் இன்னும் நீண்ட காலம் செயல்பட வழிவகுத்துள்ளது.

 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வாயேஜர் 1 சாதனை!

இதே ஆண்டு அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் விண்கலத்துடனான தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, அக்டோபர் 20-ம் தேதி மீண்டும் கிடைத்தது. விண்கலத்தின் உந்துவிசைக் கருவிகளில் (Thrusters) ஏற்பட்ட சிக்கலை அதன் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்து, மாற்று உந்துவிசைக் கருவிகளைச் செயல்படுத்தியிருந்தது.

24 மணி நேரம் காத்திருந்து பெறும் தகவல்

வாயேஜர் 1 பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதனுடன் தொடர்புகொள்ள நாசா 'ஆழ் விண்வெளி வலையமைப்பு'(Deep Space Network - DSN) என்ற தகவல் தொடர்பு முறையைப் பயன்படுத்துகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பெரிய ரேடியோ உணர்கொம்புகள் (Antennas) மூலம் இந்தத் தொடர்பு மேற்கொள்ளப்படுகிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ அலைகள் வாயேஜர் 1-ஐச் சென்றடைய சுமார் 24 மணி நேரம் ஆகிறது. அதேபோல, விண்கலத்திலிருந்து அனுப்பப்படும் தகவல் பூமியை வந்தடையவும் மற்றொரு 24 மணி நேரம் தேவைப்படுகிறது. அதாவது, ஒரு கட்டளையை அனுப்பினால், அதற்கான பதிலைப் பெற இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். விண்கலத்திலிருந்து வரும் மிக பலவீனமான சிக்னல்களை பூமியில் உள்ள பெரிய உணர்கொம்புகள் மூலம் கவனமாகப் பெற்றுப் பகுப்பாய்வு செய்கின்றனர்.

வாயேஜர் 1-ன் எதிர்காலப் பயணம்

வாயேஜர் 1 தொடர்ந்து பயணித்தாலும் அதன் மின்சார உற்பத்தி குறைந்துகொண்டே செல்கிறது. நாசாவின் தற்போதைய கணிப்புகளின்படி, 2030-களின் நடுப்பகுதி வரை பூமியுடன் தொடர்புகொள்ளத் தேவையான மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. விண்கலத்தின் நிலை மற்றும் மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளைப் பொறுத்து இந்தக் கால அளவு மாறலாம்.

பூமிக்குத் தகவல் அனுப்பும் திறனை அது இழந்தாலும் விண்வெளியில் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும். சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பிறகு கிளீஸ் 445 (Gliese 445) என்ற விண்மீனுக்கு அருகே அது கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூமியின் ஒலிகள், இசை, பல மொழிகளில் உள்ள வாழ்த்துகள் மற்றும் படங்களைப் பதிவு செய்துள்ள 'தங்கத் தகடு' (Golden Record) ஒன்றையும் அது சுமந்து செல்கிறது. பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும், மனிதகுலத்தின் அறிவியல் அடையாளமாக இந்த விண்கலம் விண்வெளியில் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும்.

Read Entire Article